/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின்தடை குளறுபடி: பொதுமக்கள் அவதி
/
மின்தடை குளறுபடி: பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 19, 2025 11:44 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மின்தடை அறிவிப்பில் நடக்கும் குளறுபடியால் வியாபாரிகளும் தொழிற்கூட உரிமையாளர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளுக்காக ஏரியா வாரியாக குறிப்பிட்ட நாளில் மின்தடை செய்யப்படுகிறது. இதற்காக 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்படும். இந்நிலையில் சிங்கம்புணரி பகுதியில் சில மாதங்களாக முதல் நாள் தான் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. முகூர்த்த நாட்களுக்கு முந்தைய நாள் மின்தடை அறிவிக்கப்பட்டதால் திருமணம் உள்ளிட்ட விசேஷ ஏற்பாட்டாளர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மக்களின் எதிர்ப்புக்கு பிறகு அந்த நாட்களில் மின்தடை செய்வது மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதியில் நேற்று (ஜூலை 19) மின்தடை செய்யப்படும் என ஜூலை 18ல் அறிவிப்பு வெளியானது.
ஆனால் சில மணி நேரங்களில் மின்தடை ரத்து செய்யப்படுவதாக மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு மக்களின் அலைபேசிகளுக்கு வந்த குறுஞ்செய்தியில் மின்தடை உண்டு என தகவல் வந்தது.
இதனால் வர்த்தகர்களும் தொழிற்கூட உரிமையாளர்களும் குழப்பத்திற்கு உள்ளாகினர். சிலர் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் நேற்று மின்தடை செய்யப்படவே இல்லை.
குளறுபடியான அறிவிப்புகளால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதால், வரும் காலங்களில் 2 நாட்களுக்கு முன்பே மின்வாரியம் உறுதியான அறிவிப்பை வெளியிட வலியுறுத்தியுள்ளனர்.