ADDED : ஜன 06, 2024 05:57 AM

திருப்புத்துார்; திருப்புத்துார் ஒன்றியம் நாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் நாகப்பன்பட்டி கல் குவாரியில் வேலை பார்த்தார். அப்போது நடந்த வெடிவிபத்தில் தன் இரு கைகளிலும் உள்ள விரல்களை இழந்தார்.
மனம் தளராமல் செயற்கை கைகளை இணைத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்ய பழகினார். குறிப்பாக எழுத பயிற்சி மேற்கொண்டார்.
முதலில் கோர்ட், தற்போது தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுத்து சுய சம்பாத்தியத்தை உருவாக்கி கொண்டார்.
தற்போது அவரின் வலது கையில் விரல் உடைந்து விட்டது. இதனால் அவரால் எழுத முடியாமல் தவிக்கிறார்.
கருப்பையா 58,கூறுகையில், செயற்கை விரல் கொண்ட கரத்தை பொருத்தி மனு எழுதி குடும்பத்தை காப்பாற்றுகிறேன்.
3 முறை விரல்களை மாற்றி விட்டேன். 2018ல் கலெக்டர் கடிதம் கொடுத்து சென்னையில் கரம் மாற்றினேன்.
ரூ. 6 ஆயிரம் என்பதால் ஒரு கைக்கு மட்டும் மாற்றினேன். இன்னொரு கைக்கு செயல்படாத ' ஷோ' கை மாட்டினேன். இப்போது எல்லாம் உடைந்து விட்டது. மாற்றிக் கொடுத்தால் எழுதவும், சாப்பிடவும் நன்றாக இருக்கும்' என்கிறார்.
மாநில அரசின் மாற்றுத் திறனாளிக்கான சான்று உள்ள இவருக்கு மாற்றுத்திறனாளி நலத்துறையினர் செயற்கைக் கரம் பொருத்த வழி காட்டுமா.