ADDED : ஜன 30, 2025 09:51 PM

காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரைக்குடி மாநகராட்சியுடன் கோட்டையூர், கண்டனுார் பேரூராட்சிகள், சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி, கோவிலுார் ஊராட்சி, தளக்காவூர்ஊராட்சிக்கு உட்பட்ட மானகிரி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.
தளக்காவூர் ஊராட்சிக்குஉட்பட்ட மானகிரி மட்டுமே இணைக்கப்படும் என்று அறிவித்த நிலையில் தற்போது மொத்த ஊராட்சியும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், தளக்காவூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் வராத ஆத்திரத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாசில்தார் ராஜா, கல்லல் யூனியன் அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
இன்ஸ்பெக்டர் மீது புகார்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் 100 நாள் வேலை கிடைக்கவில்லை என்றால் போய் சாகலாம் என்று கூறியதாக இன்ஸ்பெக்டர் மீது பெண்கள் புகார் எழுப்பினர். 100 நாள் வேலையை நம்பியே கடன் வாங்கியுள்ளோம், வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு விட்டது என்று கூறி ஆத்திரத்தில் சக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் பெரியார்கூறுகையில், சாலை மறியலால் ஆம்புலன்சுக்கு வழி விடாவிட்டால் நோயாளிகள் உயிரிழந்து விடுவார்கள் என்று தான் தெரிவித்தேன். இவர்களாக திரித்து பேசுகின்றனர் என்றார்.

