/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெருக்கடியான இடத்தில் பொதுக்கூட்ட அனுமதி
/
நெருக்கடியான இடத்தில் பொதுக்கூட்ட அனுமதி
ADDED : மார் 19, 2024 05:34 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் லோக்சபா தேர்தலையொட்டி போக்குவரத்து நெருக்கடியான இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பேரூராட்சியில் மேலுார் ரோட்டில் உள்ள சீரணி அரங்கம் முன்பாக அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. முக்கிய தலைவர்கள் இங்குதான் உரையாற்றியுள்ளனர். காரைக்குடி -- திண்டுக்கல் சாலையில் தெருமுனை பிரசாரம், வாகன பிரசாரம், ஆர்ப்பாட்டங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் சில ஆண்டுகளாக சீரணி அரங்கம் முன் கூட்டம் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்த்தன. இதனால் காரைக்குடி - திண்டுக்கல் சாலையில் கடைவீதியில் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அண்ணாதுரை மன்றம் முன்பாக பொதுக்கூட்டங்களும், பஸ் ஸ்டாண்ட் முன்பாக சிறிய தெருமுனைப் பிரசாரம், ஆர்ப்பாட்டங்களும் நடத்த அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து பெருகிய நிலையில் அங்கு பொது கூட்டங்களை நடத்துவது வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தியது. ஏற்கனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் அறிவிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் அண்ணாதுரை மன்றம் முன்பாக நிரந்தரமாக பொதுக்கூட்டம் நடத்தவும், சீரணி அரங்கம் முன்பாக தற்காலிக பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பெருகிவிட்ட நிலையில் அங்கு சாலையை மறித்து பொதுக்கூட்டம் நடத்தும்போது ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கும் இடையூறு ஏற்படும்.
எனவே பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த மாற்று இடத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

