/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிளாதரி பழப்பண்ணை மரங்களுக்கு க்யூஆர் கோடு வசதி
/
கிளாதரி பழப்பண்ணை மரங்களுக்கு க்யூஆர் கோடு வசதி
ADDED : மே 27, 2024 05:52 AM

பூவந்தி அருகே கிளாதரியில் 2020ம் ஆண்டு 34 ஏக்கர் பரப்பளவில் தோட்டகலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அரசு தோட்டக்கலைப்பண்ணை தொடங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட மூன்றாவது பண்ணை இது.
ஏற்கனவே தேவகோட்டை, நேமம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டகலைப்பண்ணை உள்ள நிலையில் திருப்புவனம், மானாமதுரை பகுதி விவசாயிகளுக்காக கிளாதரியில் தொடங்கப்பட்டது. இங்கு மா, வேம்பு, புளி, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழமர வகைகளும், மல்லி, பாரிஜாதம், கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பூச்செடி வகை கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் கன்றுகள் வழங்கப்படுகின்றன.
ஒரே சமயத்தில் 70 ஆயிரம் மரகன்றுகள் உற்பத்தி செய்யும் வகையில் வலைப்பின்னல்களுடன் கூடிய ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அல்போன்சா வகை மாமர கன்றுகள் வளர்க்கும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலும் குறுகிய, நீண்ட கால பலன் தரும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
கிளாதரி பண்ணையில் அதிகளவில் தென்னை, மா மர கன்றுகள்தான் விவசாயிகள் விரும்பி வாங்குகின்றனர்.
நான்கு ஆண்டுகளில் தற்போது வரை பத்தாயிரம் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. ஒன்பதாயிரத்து 182 தாய்ச்செடிகள் உள்ளன. சின்ன வெங்காயம் உள்ளிட்டவைகளும் சீசன் சமயத்தில் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மரகன்றுகள் அனைத்தும் சொட்டு நீர்ப்பாசனம் மூலமே வளர்க்கப்படுகிறது. மேலும் மழைத்தண்ணீர் ஆங்காங்கே சேமிக்கப்படும் வகையில் 34 ஏக்கரிலும் உறிஞ்சு குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாரத்திற்கு ஒரு முறை பண்ணைகளில் உள்ள செடிகள் வளர ஏதுவாக களைகள் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.
இது குறித்து தோட்டக்கலை அதிகாரி கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் முதன் முதலாக கிளாதரி பழப்பண்ணையில் வளர்க்கப்படும் மரங்களுக்கு க்யூஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது.
பண்ணைகளுக்கு மரகன்றுகள் வாங்க வரும் பலரும் மரங்களை பற்றிய எந்த விதமான புரிதல்களும் இன்றி வாங்க வருகின்றனர். க்யூ ஆர் கோடுகளை அலைபேசி மூலம் ஸ்கேன் செய்யும் போது மரங்களின் பெயர்கள், தாவரவியல் பெயர், மரங்கள் பூக்கும் மாதங்கள், காய்கள் பிடிக்கும் மாதங்கள், அவற்றை பராமரிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தெரியவரும், இதன் மூலம் மரங்களை பற்றி அனைத்தும் அறிந்து கொண்டு மர கன்றுகள் வாங்கி செல்கின்றனர்.
கிளாதரி பழப்பண்ணைக்கு வருகை தரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இந்த க்யூ ஆர் கோடு வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

