/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் ரயில்வே கிளை அலுவலகம்.. தேவை: எளிய மக்கள் பயணிக்க முடியாத அவல நிலை
/
தேவகோட்டையில் ரயில்வே கிளை அலுவலகம்.. தேவை: எளிய மக்கள் பயணிக்க முடியாத அவல நிலை
தேவகோட்டையில் ரயில்வே கிளை அலுவலகம்.. தேவை: எளிய மக்கள் பயணிக்க முடியாத அவல நிலை
தேவகோட்டையில் ரயில்வே கிளை அலுவலகம்.. தேவை: எளிய மக்கள் பயணிக்க முடியாத அவல நிலை
ADDED : செப் 04, 2025 04:21 AM

தேவகோட்டை நகராட்சி முதலில் ஆரம்பித்த நகராட்சிகளில் மூன்றாவது நகராட்சி. ஆனால் இன்று வரை ரயில்வே ஸ்டேஷன் இல்லாத நகராட்சியும் தேவகோட்டை தான். தேவகோட்டைக்கான ரயில்வே ஸ்டேஷன் 15 கி.மீ., தொலைவில் காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா (தேவகோட்டை ரோடு) என்ற இடத்தில் உள்ளது.
இந்த இடத்தில் தான் சினிமா ஸ்டுடியோக்கள் இருந்தது. சினிமாக்காரர்கள் வந்து செல்ல வசதியாக அமைந்தது. ஆனால் நகரில் உள்ள மக்கள் ரயில்வே பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. தேவகோட்டை ரோடு வழியாக ராமேஸ்வரம், சென்னை, மைசூர் புவனேஸ்வர், ஹுப்ளி என பல ரயில்கள் செல்கின்றன. வசதி படைத்தோர் தான் ரயில் பயணம் செல்ல முடிகிறது.
தேவகோட்டை சென்னை ரயில் கட்டணம் ரூ. 200 தான். கட்டணம் குறைவாக இருந்தும் சாதாரண மக்கள் ரயில் பயணம் மேற்கொள்ள முடியாமல் தனியார் பஸ்களில் ரூ ஆயிரமும் முக்கியமான நாட்களில் சென்னைக்கு ரூ. 3 ஆயிரம் கொடுத்து பயணிக்கின்றனர். இதற்கு காரணம் எந்த ரயில் செல்கிறது, டிக்கெட் கிடைக்குமா என தெரியாமல் டிக்கெட் வாங்க 15 கி.மீ. செல்ல வேண்டிய நிலை. அப்படியே சென்றாலும் ஏமாற்றம் ஏற்படலாம் என்பதால் செல்வதில்லை.
தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூர் பகுதிகளில் வசிக்கின்றனர். தேவகோட்டையில் இருந்து அரசு விரைவு பேருந்து, ஆம்னி பஸ்கள் தினமும் சென்னைக்கு மட்டும் 15 பஸ்கள் செல்கின்றனர்.
புக்கிங் கவுன்டர் அவசியம் தேவகோட்டை நகரில் புக்கிங் கவுன்டர் திறக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அலுவலகம் திறக்க முடிவு செய்யப்பட்டது. என்ன காரணத்தாலோ திறக்கவில்லை. தொடங்கும் அலுவலகத்தில் ரயில்கள், ஒதுக்கப்பட்ட இருக்கைகள், அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். இதனால் அதிகமான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்வார்கள். மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கும் நிலை கூட உருவாகும். ரயில்வே துறை கூடுதல் வருமானம் கிடைக்கும்.
இது பற்றி ஓட்டல் உரிமையாளர் கண்ணன் கூறுகையில், பஸ்களை விட அதிகளவு ரயில் பயணம் தான் செல்கிறோம். மற்ற நகரங்களில் இருந்து வரும் போது எளிதில் வந்து விடுகிறோம். அதே நேரம் இங்கிருந்து செல்ல முடியவில்லை. ரயில் உண்டா, வருமா என பார்க்க வேண்டி இருப்பதால் ரஸ்தா செல்ல முடியவில்லை. எனவே ஏழை மக்களின் நன்மை கருதி மத்திய அரசு தேவகோட்டை நகரில் ஒரு கிளை புக்கிங் கவுன்டர் துவங்க வேண்டும்.

