/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் ரயில் நிலையம் தேவை: நிறைவேற்றுவார்களா
/
தேவகோட்டையில் ரயில் நிலையம் தேவை: நிறைவேற்றுவார்களா
தேவகோட்டையில் ரயில் நிலையம் தேவை: நிறைவேற்றுவார்களா
தேவகோட்டையில் ரயில் நிலையம் தேவை: நிறைவேற்றுவார்களா
ADDED : ஏப் 12, 2024 04:42 AM
சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளாகியும் தேவகோட்டையில் ரயில்வே ஸ்டேஷன் இல்லை. தமிழகத்தில் ரயில்வே ஸ்டேஷன், ரயில் வழித்தடம் இல்லாத ஒரே நகராட்சி தேவகோட்டை நகராட்சி தான்.
தேவகோட்டை நகர் மக்களும், அதன் கிழக்கே 30 கி.மீ. துாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் சென்னை உட்பட முக்கிய இடங்களுக்கு ரயில் பயணம் செய்ய வேண்டும் எனில், தேவகோட்டையில் இருந்து 15 கி.மீ. துாரத்தில் காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா ஸ்டேஷனுக்கு, அல்லது காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு தான் செல்ல வேண்டும்.
மக்களின் நீண்ட நாள் கனவான தேவகோட்டை ரயில்வே ஸ்டேஷன், வழித்தடம் பற்றி மக்கள் பிரதிநிதிகளும் பேச வேண்டிய இடத்தில் பேசுவது இல்லை.
அரசியல்வாதிகளும் கண்டு கொள்வது இல்லை. ஏற்கனவே காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக ரயில் பாதை அமைக்க வழித்தடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இன்றும் கூட இடம் சர்வே தொடர்பான அரசின் பழைய பதிவேடுகளில் ரயில் பாதை (எஸ்.ஆர்.) என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனோ யாரும் வாயை திறப்பதில்லை. ரஸ்தா ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பிளாட்பாரம் தொடர்பான பிரச்னைகளை கூட தேவகோட்டையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் தான் உயர்அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது.
துாரம் பயன்கள் ஏராளம்
தற்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி சென்று ராமநாதபுரம் செல்லும் நிலை உள்ளது.
தேவகோட்டை வழியாக ரயில்வே தடம் அமைத்து திருவாடானை தொண்டி வழியாக ராமநாதபுரத்திற்கு ரயில் பாதை அமைத்தால் ராமேஸ்வரம் செல்ல 50 கி.மீ.துாரம் மிச்சமாகும். துாரம் குறைவதால் நேரம் மட்டும் இன்றி கட்டணமும் குறையும். இந்த வழித்தடத்தில் தினமும் 50க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பஸ்கள் செல்லும் நிலையில் ஏழை மக்கள் குறைந்த கட்டணத்தில் தொலைதுாரங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும்.
இதுவரை இருந்த எம்.பி.க்கள் சாதனைகளாக பஸ் ஸ்டாப், தெருவிளக்கு அமைப்பது ஊராட்சி தலைவர் செய்யும் பணிகளை செய்கின்றனர்.
எம்.பி.க்கள் செய்ய வேண்டிய பணிகளை செய்வதில்லை என்ற புகார் மக்களிடம் உள்ளது. தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேவகோட்டை வழியாக செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி தர வேண்டும்.

