ADDED : அக் 12, 2024 04:41 AM

காரைக்குடி: காரைக்குடியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர், பெருக்கெடுத்து ஓடியது.
காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் அதிக அளவில் இருந்தது. மாலையில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று மாலை தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது.
சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சாலையோரம் ஒதுங்கினர். செக்காலை, கல்லூரி சாலை, ரயில்வே ரோடு உட்பட பல இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆயுத பூஜையான, நேற்று ஏராளமான வியாபாரிகள் சாலையோரம் கடைகள் அமைத்திருந்தனர். மழையால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
வீடுகளை சூழ்ந்த மழை நீர்
காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாப்பா ஊருணி அருகேயுள்ள காட்டுநாயக்கன் 12வது வீதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், மழை காலங்களில் தண்ணீர் செல்ல வழி இன்றி வீடுகளை சூழ்ந்து வருகிறது.
இங்குள்ள வீரையன் கண்மாயை சுற்றிலும், ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேறி காட்டுநாயக்கன் குடியிருப்புக்கு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மழைக்காலங்களில் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சேகர் கூறுகையில்:
பல ஆண்டுகளாக இப்பிரச்னை நிலவி வருகிறது. 34 மற்றும் 35 ஆவது வார்டுகளுக்கு மத்தியில் உள்ளதால் இப்பிரச்னையை சரி செய்ய யாரும் முன்வரவில்லை. இவரிடம் கேட்டால் அவரிடம் கேள், அவரிடம் கேட்டால் இவரிடம் கேள் என்று சொல்கின்றனர். குழந்தைகள் வயதானவர்கள் சிரமம் அடைவதோடு நோய் அபாயமும் நிலவுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் கூறுகையில்: தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் தேங்கி விடுகிறது. தேங்கிய மழை நீர் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிரந்தரமாக மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.