/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேதமடைந்த மடைகளால் வீணான மழை நீர்
/
சேதமடைந்த மடைகளால் வீணான மழை நீர்
ADDED : ஜன 02, 2025 11:53 PM

காரைக்குடி; காரைக்குடி மற்றும் சாக்கோட்டையில் பொதுப்பணித்துறை கண்மாய் கலுங்கு, மடைகள் முறையாக சீரமைக்கபடாததால், விவசாயத்திற்கு தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 121 கண்மாய்கள் உள்ளன. சாக்கோட்டை யூனியனில்  308  கண்மாய்களும், 375 ஊரணிகளும் உள்ளன.
தற்போது மாவட்டம் முழுவதும்,   பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு கண்மாய்கள் நிரம்பி உள்ளன.  காரைக்குடி மற்றும் சாக்கோட்டை வட்டாரத்தில் பெய்த கனமழையால் மழைநீரால் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. பொதுப்பணித்துறை கண்மாய்கள் பலவும் பராமரிப்பின்றியும், தூர்வாரப்படாமலும் கருவேல மரங்கள் சூழ்ந்து கிடக்கிறது. கண்மாய்களின் நீர் ஆதாரமான வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் சிக்கி அழிந்து வருகிறது. மேலும் விவசாயத்தின் ஆதாரமான கண்மாய் மடைகள் கலுங்குகள் முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் நல்ல மழை பெய்தும் தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்: சாக்கோட்டை வட்டாரத்தில் யூனியன் மற்றும் பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்ளன. மழைக்காலத்திற்கு முன்பே அனைத்து பொதுப்பணித்துறை கண்மாய்களை தூர்வாரியும், மடைகள் கலுங்குகளை பராமரிக்கவும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் சில கண்மாய்கள் மட்டுமே தூர்வாரப்பட்டது. மடைகளும் சரி செய்யப்பட்டது. பெரும்பாலான மடைகள் சேதமடைந்தும், கருவேல மரங்கள்  வளர்ந்தும் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் நல்ல மழை பெய்தும், தண்ணீர் வெளியேறி வீணாகிறது என்றனர்.

