/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் ராப்பத்து உற்ஸவம் துவக்கம்
/
திருக்கோஷ்டியூரில் ராப்பத்து உற்ஸவம் துவக்கம்
ADDED : ஜன 01, 2026 05:33 AM
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பரமபதவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று ராப்பத்து உற்ஸவம் துவங்கி தினசரி இரவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளுகிறார்.
சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் அத்யயன உற்ஸவத்தில் பகல் பத்து டிச. 20ல் துவங்கியது. டிச.29 ல் நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து நிறைவடைந்தது., நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலையில் பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் ராஜாங்க அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு 8:40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்ரீதேவி,பூதேவியருடன் ராஜ அலங்காரத்தில் பெருமாள் கடந்தார். ஆழ்வார் பாசுரங்கள் பாடப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ராப்பத்து உற்ஸவ துவக்கத்தை முன்னிட்டு நேற்று மாலை பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி பலாமரத்து வீதி உலா வந்தார். தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் கடந்து சென்றார். பின்னர் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி பத்தி உலாத்துதல் நடந்தது.
பின்னர் தாயார் சன்னதியில் எழுந்தருளி ஆராதனை, ஆழ்வார் பாசுரங்கள் சேவித்து நம்மாழ்வார் திருவடி தொழுதலும் நடந்தது. தேவஸ்தான மாலை, பரிவட்ட மரியாதைகள் நடந்து கோஷ்டி பிரபந்தத்துடன் நிறைவடைந்தது. ஜன.8 ல் ராப்பத்து உற்ஸவம் நிறைவடையும்.

