ADDED : ஜூலை 16, 2025 01:46 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்குவதால் ஊழியர்களும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
இப்பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும் சேர்த்து 8 இடங்களில் ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இதில் காரைக்குடி ரோட்டில் கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ள கடை மட்டுமே சொந்த கட்டடத்தில் இயங்குகிறது. மற்ற 7 கடைகளும் குறுகலான தெருக்களில் இட நெருக்கடியுடன் வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. சொந்த கட்டடம் இல்லாததால் பொருட்களை சேமித்து வைக்க ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். கடைக்கு வரும் பொது மக்கள் போதிய இடவசதி இல்லாததால் வெயிலிலும் மழையிலும் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.
குறிப்பாக கடை எண் 1 வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் நிலையில் அம்பேத்கர் நகர், நாட்டார்மங்கலம் ரோடு, மருதந்குண்டு, தெற்கு தெரு, சுந்தரராயர் தெரு, கம்மாளர் தெரு செட்டியவளவு உள்ளிட்ட பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த கடையை சந்திவீரன் கூடம், தெற்கு தெரு அருகே மையப்பகுதியில் சொந்த கட்டடத்தில் அமைத்தால் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்ல வசதியாக இருக்கும். எனவே நகரில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டடம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.