/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆர்.சி., ஸ்மார்ட் கார்டில் எழுத்துக்கள் மாயம்
/
ஆர்.சி., ஸ்மார்ட் கார்டில் எழுத்துக்கள் மாயம்
ADDED : நவ 13, 2024 07:29 AM

காரைக்குடி : காரைக்குடியில் வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட ஆர்.சி., ஸ்மார்ட் கார்டில் (டி.என்) தமிழ்நாடு என்ற எழுத்து இல்லாததால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரைக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி., புக் ஆகியவற்றை பொதுமக்கள் நேரில் சென்று பெறுவதை தவிர்க்கும் விதமாக போஸ்ட் ஆபீஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பப்படுகிறது.
காரைக்குடி வட்டாரத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பதிவுச் சான்றிதழ் ரத்து, பெயர் மாற்ற பதிவுச் சான்றிதழ் மற்றும் புதிய பதிவு சான்றிதழ் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் திணறி வந்தனர். இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும் ஆர்.சி., ஸ்மார்ட் கார்டில் வாகன எண்ணிற்கு முன்பு குறிக்கப்பட்டுள்ள டி.என் என்ற எழுத்து முழுவதுமாக அழிந்து காணப்படுகிறது. பல ஆர்.சி., ஸ்மார்ட் கார்டில் இந்த பிரச்னை உள்ளதால், வாகன உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று புகார் கூறி வருகின்றனர்.
வாகன உரிமையாளர்கள் கூறுகையில்: காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து ஆர்.சி., புக் அனுப்புவது தாமதமாகிறது. கார்டு அச்சிடுவதில் பிரச்னை, ஆட்கள் பற்றாக்குறை என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் தெரிவிக்கின்றனர். தற்போது அனுப்பி வைக்கப்படும் ஆர்.சி.யில் டி.என். என்ற எழுத்து இல்லை. இந்த ஆர்.சி., கார்டை பயன்படுத்தவும் முடியாது. ஆர்.சி., கார்டு இருந்தால் தான் அடுத்த பணிகளை வாகன உரிமையாளர்கள் மேற்கொள்ள முடியும். இப்பிரச்னையால் இன்னும் பல நாட்கள் ஆர்.சியை மாற்றுவதற்கு அலைய வேண்டியிருக்கும்.
மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் கூறுகையில்: ஆர்.சி ஸ்மார்ட் கார்டில் எழுத்துக்கள் அழிந்திருந்தது சம்பந்தமாக புகார் வந்தது. அழிந்திருந்த ஸ்மார்ட் கார்டுகளை சரி செய்யப்பட்டு மீண்டும் வழங்கி வருகிறோம். இனி இது போன்று பிரச்னை ஏற்படாதவாறு சரி செய்து விட்டோம்.