/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை அருகே ரயில் பாதையில் ‛'கிளிப்' அகற்றம்
/
மானாமதுரை அருகே ரயில் பாதையில் ‛'கிளிப்' அகற்றம்
ADDED : செப் 27, 2024 02:25 AM
மானாமதுரை:சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேற்று காலை, 8:00 மணிக்கு திருச்சி ரயில் புறப்படத் தயாரானது. அப்போது ஸ்டேஷனுக்கு அருகில், தண்டவாளத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் நின்றிருந்தார்.
இதை கவனித்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில் டிரைவர்கள், அப்பகுதிக்கு சென்று பார்த்த போது, இரண்டு கிளிப்கள் அகற்றப்பட்டிருப்பதை கண்டனர்.
அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அகற்றப்பட்டிருந்த கிளிப் மீண்டும் உடனடியாக பொருத்தப்பட்டதை தொடர்ந்து, ரயில் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது.
ரயில்வே போலீசார் கூறியதாவது:
சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரித்ததில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததால் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், கிளிப் கழன்று கிடந்தது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
தண்டவாளத்தில் உள்ள கிளிப் அவ்வப்போது ரயில்கள் செல்லும் அதிர்வினாலும், கிரீஸ் வைக்கும் போதும் ஒன்றிரண்டு தானாக கழன்றும் விடும். அதனை, கீமேன்கள் சரி செய்வது வழக்கமான ஒன்று தான். அதே போன்று தான் நேற்றும் கிளிப் கழன்று விழுந்திருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த செப்., 16ல், ராமநாதபுரம் மாவட்டம் சூடியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் இருந்த, 420 கிளிப்கள் அகற்றப்பட்டது தொடர்பாக, ரயில்வே டி.எஸ்.பி., பொன்னுச்சாமி தலைமையில், மூன்று தனிப்படைகள் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.