கண் துடைப்புக்காக நடக்கும் சீமைக்கருவேலம் அகற்றும் பணி
கண் துடைப்புக்காக நடக்கும் சீமைக்கருவேலம் அகற்றும் பணி
UPDATED : நவ 21, 2026 06:10 PM
ADDED : நவ 21, 2026 06:10 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி முழுமை பெறாமல் கண்துடைப்புக்காக நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வொன்றியத்தில் சிவபுரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 110 ஏக்கர் பரப்பு கொண்ட மட்டிக்கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாயில் இரண்டு கட்டமாக பணிகள் நடக்கிறது. கரைகளில் ஒரு கட்டமாகவும், கண்மாய் உள்ளே மற்றொரு கட்டமாகவும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரைகளில் மரங்களை முழுமையாக அகற்றாமல் கண் துடைப்புக்காக மேலோட்டமாக அகற்றியுள்ளனர். சிறிய அளவிலான சீமைக்கருவேல செடிகள் அப்படியே விடப்பட்டுள்ளன. இவை மீண்டும் வளர்ந்து மறுபடியும் கண்மாயில் பெருகும் நிலை உள்ளது. எனவே இக்கண்மாயில் மட்டுமின்றி பணிகள் நடைபெறும் அனைத்து கண்மாய்களிலும் சீமைக்கருவேல மரங்களை முழு அளவில் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
