/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வனப்பகுதியிலுள்ள ரோடு புதுப்பிப்பது இழுபறி
/
வனப்பகுதியிலுள்ள ரோடு புதுப்பிப்பது இழுபறி
ADDED : ஜன 30, 2024 11:41 PM

திருப்புத்துார் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் நடை பெறும் போதெல்லாம் தெக்கூர் மற்றும் வேலங்குடி கவுன்சிலர்கள் வைக்கும் கோரிக்கை வனப்பகுதியிலுள்ள ரோடு புதுப்பிப்பது எப்போது என்ற கேள்வி தான். இருப்பினும் கடந்த நான்கு ஆண்டுகளாக கேட்கப்படும் இந்த கேள்விக்கு அதிகாரிகள் கூறும் பதில் வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை என்பது தான்.
திருப்புத்துார் ஒன்றியம் ஆ.தெக்கூரிலிருந்து வடக்கூர், திருக்களம்பூர் வழியாக செல்லும் இந்த ரோடு பிரான்மலை, எஸ்.வி.மங்கலம், வேந்தன்பட்டி செல்ல பயன்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள இந்த ரோட்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருக்களம்பூர் பகுதியில் ரோடு போடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 1.5 கி.மீ. அளவில் ரோடு போடுவதில் வனத்துறை அனுமதி இல்லாமல் தாமதமாகியுள்ளது.
அது போல் வேலங்குடியிலிருந்து மகிபாலன்பட்டி செல்லும் 3 கி.மீ. ரோடும் வனத்துறை அனுமதி கிடைக்காமல் உள்ளது. இதனால் பொது மக்களின் வாகனப் போக்குவரத்து அப்பகுதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பொறியாளர் வீரப்பன் கூறுகையில், வனத்துறைக்கு ஆன் லைனில் விண்ணப்பித்து சிவகங்கை மாவட்ட, விருதுநகர் மண்டல அனுமதி பெற்று தற்போது டெல்லி அலுவலகத்தில் அனுமதிக்காக காத்திருக்கிறது' என்றார்.
வனத்துறையினர் கூறுகையில், தற்போது சிவகங்கை வனத்துறை மதுரை வனத்துறை வட்டத்தில் உள்ளது. வனத்துறை பொதுமக்கள் பயன்படுத்தும் பாதைகளை பயன்படுத்த 1980க்கு முன்பே அனுமதி அளித்திருந்தால் மாநில வனத்துறையிடம் நேரடியாக விண்ணப்பித்து எளிதாக அனுமதி பெற முடியும்.
அனுமதி பெறாத சாலைகளுக்கு ஆன் லைனில் விண்ணப்பித்து மத்திய வனத்துறையின் அனுமதி பெறுவது அவசியமாகும்' என்றனர்.
ஆ.தெக்கூர் தொப்புலான் குமார் கூறுகையில், அதிகாரிகளிடம் பல முறை மனுக்கொடுத்தும் ரோடு புதுப்பிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக இந்த ரோட்டில் போக்குவரத்து உள்ளது. சிங்கம்புணரி, பொன்னமராவதி, பிரான்மலை சென்று வருகிறோம். ரோடு புதுப்பித்தால் விபத்தின்றி வாகனப் போக்குவரத்து நடைபெறும்' என்றார்.
பல இடங்களில் வனப்பகுதியில் அனுமதியின்றி ரோடுகள் போடப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வசதிக்காகவும், வன உயிரினங்கள் இல்லாத பகுதிகளில் தடுப்பதில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னையால் வனத்துறையினர் தடுப்பதில்லை.
1980 க்கு முன்பு வரை இந்த நிலையே நீடித்துள்ளது. தற்போது அனைத்துமே விண்வெளி ஒளிப்பதிவு மூலம் வனப்பகுதி பதிவான பின், அனுமதியில்லாத ரோடுகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே நிலைதான் இந்த ரோடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர் நடவடிக்கைகளின் மூலமே வனத்துறையின் அனுமதி சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது.