ADDED : அக் 01, 2025 10:04 AM
சிவகங்கை : தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், காரை ஊராட்சிக்கு உட்பட்ட அடசிவயலில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் ரோட்டை புதுப்பிக்க வேண்டுமென கிராமத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தேவகோட்டை அருகே கோட்டூர் நயினார்கோயிலில் இருந்து அடசிவயல் வரை 3 கி.மீ., துாரத்திற்கு தார் ரோடாக இருந்தது. இந்த ரோட்டை சில ஆண்டிற்கு முன் புதுப்பித்தனர். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இந்த ரோட்டை பராமரிக்காமல் விட்டு விட்டது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக மழைக்காலத்தில் சகதி காடாக மாறி விடுகிறது.
மேலும், அடசிவயல் கண்மாய் கரையில் தடுப்பு சுவர் கட்டாததால் கண்மாய் கரை மண் கழிவு சேர்ந்து மழைக்காலத்தில் சகதியாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு அடசிவயல், சிறுமடை, ஈச்சன்வயல், காலக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் தவிக்கின்றனர்.
இந்த ரோட்டை புதுப்பித்து தருமாறு சிவகங்கை கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் கிராமத்தினர் புகார் அளித்தனர்.