/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகையில் நாணல்களால் நீர்வரத்திற்கு இடையூறு: திருப்புவனம் விவசாயிகள் கவலை
/
வைகையில் நாணல்களால் நீர்வரத்திற்கு இடையூறு: திருப்புவனம் விவசாயிகள் கவலை
வைகையில் நாணல்களால் நீர்வரத்திற்கு இடையூறு: திருப்புவனம் விவசாயிகள் கவலை
வைகையில் நாணல்களால் நீர்வரத்திற்கு இடையூறு: திருப்புவனம் விவசாயிகள் கவலை
ADDED : அக் 01, 2025 10:03 AM

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றினுள் நாணல் அடர்ந்து காணப்படுவதால் நீர் திறப்பின் போது கண்மாய்களுக்கு முழுமையாக தண்ணீர் செல்ல வாய்ப்பில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
சம்பா பருவ சாகுபடிக்காக வைகை ஆற்றில் இருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் தண்ணீர் திறப்பது வழக்கம்.
மதுரை மாவட்டம் விரகனுார் மதகு அணையில் இருந்து மானாமதுரை வரை ஆற்றினுள் நாணல், கருவேல மரங்கள், எருக்கஞ்செடிகள் வளர்ந்துள்ளன. வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் நாணல், கருவேல மரங்களால் முழுமையாக கண்மாய்களுக்கு செல்வதில்லை. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. 2020 - 21ல் வைகை ஆற்றை தூர் வாரும் பணியை அப்போதைய கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார். ஒரே நேரத்தில் பத்து இயந்திரங்களை வைத்து துரித கதியில் ஆறு தூர் வாரப்பட்டது. அதன்பின் தூர் வாரப்படாததால் கருவேல மரங்கள் வளர்ந்து காடாக காட்சியளிக்கிறது.
திருப்புவனம் புதூர் வைகை ஆற்றுப்படுகையில் கானூர் படுகை அணை பணிக்காக அந்த இடங்களில் மட்டும் பொதுப்பணித்துறையினர் வைகை ஆற்றை சுத்தம் செய்தனர். அடுத்த மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் வைகை ஆற்றை முற்றிலும் தூர் வாரி மரம் , செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.