ADDED : நவ 11, 2025 11:58 PM
சிவகங்கை: சிவகங்கை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட மாநாடு நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் ரெங்கசாமி வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். செயலர் முத்துச்சாமி அறிக்கை வாசித்தார். பொருளாளர் சகாயம் ஜோசப் சேவியர் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
மாநில பொதுச் செயலர் பர்வதராஜன், மாநில துணை பொதுச் செயலர் மனோகர ஜஸ்டஸ் பேசினர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். தேர்தல் வாக்குறுதியான 70 வயதில் 10 சதவீதம் ஓய்வூதிய உயர்வை உடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டக் குளறுபடிகளைக் களைந்து காசில்லா மருத்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல்முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுசிலாதேவி, மாவட்டத் துணைத் தலைவர் தேவி, மாவட்ட இணைச் செயலர் கருப்பாயி, ஆறுமுகம், கனகராஜ், பிச்சையப்பன், பாஸ்கரன், ஜோசப் இருதயம், மீனாட்சிசுந்தரம், கிருஷ்ணன், வடிவேலு, பெர்னாட்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

