/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெல்வரத்து குறைவால் அரிசி விலை உயர்வு
/
நெல்வரத்து குறைவால் அரிசி விலை உயர்வு
ADDED : பிப் 01, 2024 04:28 AM
காரைக்குடி : தமிழகத்தில் தொடர் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக நெல் விலை உச்சமடைந்துஉள்ளதால், அரிசி விலையும் உயர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. புதுவயல், பள்ளத்தூர், கண்டனூர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன.
இந்த அரிசி ஆலைகளில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வட மாநில தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இங்குள்ள அரிசி ஆலைகளுக்கு தஞ்சாவூர், ஆவுடையார்கோவில், திருவாடானை, புதுக்கோட்டை பட்டுக்கோட்டை மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நெல் அரவைக்காக கொண்டு வரப்படுகிறது.
இப்பகுதியில் இருந்து சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஆர்.என்.ஆர், பொன்னி, கோ 51, கே.சி.எல்., கல்சர் பொன்னி உள்ளிட்ட அரிசி வகைகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
மழை வெள்ளம் மற்றும் நெல் வரத்து குறைந்துள்ளதால் அரிசி விலை அதிகரித்துள்ளது.இதனால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், தற்போது, அனைத்து இடங்களிலும் நெல் வரத்து குறைந்துள்ளது. நெல் வரத்து குறைந்துள்ளதால் நெல் விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 62 கிலோ கொண்ட ஒரு மூடை நெல் ரூ.ஆயிரத்து 350 ஆக இருந்தது. தற்போது ஒரு மூடை ரூ. ஆயிரத்து 720 வரை உயர்ந்துள்ளது.
டீலக்ஸ் ரக அரிசி மொத்த விலை, பழையது கிலோ ரூ.55க்கும் புதியது ரூ. 50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.என்.ஆர் புதியது ரூ. 55க்கும் பழையது ரூ. 60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தின் பல இடங்களிலும் புயல் மழை வெள்ளத்தால் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதும் காரணம். தவிர, வெளி மார்க்கெட்டில் நெல்விலை உயர்ந்ததுள்ளதால் அதே விலைக்கு தான் இங்கும் கொடுக்க வேண்டி உள்ளது என்றனர்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் நலச்சங்க, மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.கிருஷ்ணன் கூறுகையில், நெல் விலை கடந்த ஆண்டு கிலோ ரூ. 20-க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. அரிசி விலையும் ரூ. 10 அதிகரித்துள்ளது.
நெல் விலை ஒரு பக்கம் உயர்ந்திருந்தாலும், விவசாயிகளுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி தான்.
ஏனென்றால், உரம் கூலி என அனைத்தும் விலை உயர்ந்த நிலையில் நெல்லுக்கு மட்டும் விலை ஏற்றம் இல்லாததால் விவசாயிகள் பலர் விவசாயத்தை தவிர்த்து வந்தனர். தற்போது, நெல்லுக்கு விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கும் விவசாயத்தில் ஆர்வம் ஏற்படும்.