/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெல் விளைந்தும் பிரச்னை தொடர்கிறது
/
நெல் விளைந்தும் பிரச்னை தொடர்கிறது
ADDED : பிப் 02, 2025 06:39 AM
சிவகங்கை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 2024--25ம் ஆண்டு 1 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கரில் 78 ஆயிரம் எக்டேர் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காளையார்கோவில், இளையான்குடி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை துவங்கி நடந்து வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்திற்கான அனைத்து பணிகளையும் ஆட்களே செய்து வந்தனர். பின்னர் ஆட்கள் தட்டுப்பாடு, கூடுதல் செலவினத்தால் இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. தற்போது களையெடுத்தல், நாற்று நடுதல் அல்லது விதைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே ஆட்கள் செய்கின்றனர். நிலம் சமப்படுத்தல், உழுவது, கதிரறுத்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மாவட்டம் முழுவதும் கதிரறுக்கும் பணிக்கு அனைத்து இடங்களிலுமே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் போதிய இயந்திரங்கள் இல்லாமல் கதிரறுக்கும் பணி தாமதமானது. ஆண்டுதோறும் கதிரறுக்கும் இயந்திரங்கள் நாமக்கல், பெரம்பலுார், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு பயன்படுத்தப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனியார் சிலர் மாத வாடகை அடிப்படையில் கதிரறுக்கும்இயந்திரத்தை எடுத்து வருகின்றனர். அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் மட்டுமே கதிரறுக்கும் பணி இருக்கும் என்பதால் இவ்வாறு மொத்த வாடகைக்கு எடுத்து வருகின்றனர். இவ்வாறு கொண்டு வரப்படும் இயந்திரங்களுக்கு கதிரறுக்கும் பணிக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் கதிரறுக்கும் இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த ஆண்டும் ஒரு இயந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு இயந்திரத்தை வைத்து மாவட்டம் முழுவதும் அறுவடை செய்ய முடியாது. இதனால் மீண்டும் தனியார் இயந்திரங்கள் மூலமே அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இயந்திர தட்டுப்பாட்டை பயன்படுத்தி தனியார் அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமே இயந்திரங்கள் வரவேண்டிய நிலையால் பல நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. மாவட்ட நிர்வாகம் கூடுதல் கதிரறுக்கும் இயந்திரங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.