/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெற்பயிர்களில் களைகள் அதிகரிப்பால் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம்
/
நெற்பயிர்களில் களைகள் அதிகரிப்பால் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம்
நெற்பயிர்களில் களைகள் அதிகரிப்பால் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம்
நெற்பயிர்களில் களைகள் அதிகரிப்பால் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம்
ADDED : டிச 06, 2024 05:34 AM
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் நெற்பயிர்களில் களைகள்அதிகமாக காணப்படுவதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் பத்தாயிரம் ஏக்கரில் என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., கோ 50, கோ 51, அண்ணா ஆர் 4, கல்சர் பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் என்.எல்.ஆர்., ரகமே அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்ட விதை நெல்லில் களைகள் அதிகம் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
நாற்றங்காலில் இருந்து நாற்று நடவு செய்யப்பட்ட நிலையில் களைகள் அதிகம் காணப்படுகின்றன. நெல் வயல்களில் களைகளை கூலி ஆட்கள் மூலம் தான் எடுப்பார்கள், ஒரு ஏக்கர் வயலில் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் எட்டு நபர்கள் வரை இணைந்து களை அகற்றலாம்.
களை எடுக்க நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 450 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுதவிர டீ, காபி, வடை உள்ளிட்டவைஇரு வேளை வழங்க வேண்டும், அப்படி வழங்கியும் ஆட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. களை எடுக்க ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் பலரும் களை கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் களைகள் மட்டுப்பட்டாலும் விளைச்சல் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு களை எடுக்க கூலி அதிகரித்துஉள்ளதால் விவசாயத்தில் செலவீனம் அதிகரித்துஉள்ளது. வடகிழக்கு பருவ மழை தாமதமாக பெய்தாலும் பல இடங்களில் நடவு பணிகள் நடந்து வருகின்றன.
அனைத்து பகுதிகளிலும் விவசாயம் நடப்பதால் கூலி ஆட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுஉள்ளது. 100 நாள் திட்டப்பணிக்கு பலரும் சென்றுவிட்டு மதியம் களை எடுக்க வருகின்றனர்.
மூன்று மணி முதல் ஐந்து மணி வரை களை எடுக்க 250 ரூபாய் கூலி கேட்பதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளோம். மழை காரணமாக ஏக்கருக்கு 40 மூடைகள் நெல் கிடைக்கும் இடத்தில் களைகளால் 30 மூடை வரையே கிடைக்கும், என்றனர்.