ADDED : ஜூலை 10, 2025 02:53 AM

தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா புளியால் அருகே உள்ளது பருத்தியூர் .இந்த கிராமத்தின் ஒரு பகுதியில் 140 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்பு பகுதிக்கு பாதை உள்ளது.
அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல பாதை இல்லை. 20 வருடங்களுக்கு முன் சிலர் தங்கள் இடத்தை பாதைக்காக விட்டு கொடுத்தனர். இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் அவருடைய இடத்துடன் பாதை இடத்திற்கும் பட்டா வாங்கி விட்டார். பாதையில் இருந்த மின் கம்பம் தற்போது அந்த இடத்திற்குள் தான் உள்ளது. இந்த நிலையில் நான்கு தினங்களுக்கு முன் திடீரென பாதையை அடைத்து விட்டார். இதனால் 140 குடும்பத்தினர் தங்கள் பகுதியில் இருந்து வெளியே செல்ல முடியவில்லை.
நேற்று காலை 9:30 மணிக்கு தங்கள் கிராமத்தை இணைக்கும் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. கவுதம் அடைக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு தாசில்தாரை வரவழைத்தார்.
டி.எஸ்.பி. கவுதம், தாசில்தார் சேதுநம்பு , இன்ஸ்பெக்டர் சரவணன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் இன்று ( வியாழக்கிழமை) மதியம் 3:00 மணிக்கு சம்பந்தப்பட்ட சூசைமாணிக்கம், கிராமத்தினர் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி பாதைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியதை தொடர்ந்து கிராமத்தினர் கலைந்து சென்றனர்.