ADDED : மார் 12, 2024 06:01 AM

காரைக்குடி : காரைக்குடி நகராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு கீழ ஊரணி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் முறையாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து இந்திய கம்யூ., நகரச் செயலாளர் சிவாஜி காந்தி தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சிவாஜி காந்தி கூறுகையில்:
காரைக்குடி கீழ ஊரணி பகுதியில் காலை நேரத்தில் குடிநீர் வருகிறது. இந்த குடிநீர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முறையாக கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் மட்டுமே வசிக்கும் இப்பகுதியில் குடிநீர் மட்டுமின்றி சாலை, தெரு விளக்குகள், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் பாரபட்சமின்றி குடிநீர் வழங்கிடவும் அடிப்படை வசதிகளை செய்து தரவும் முன்வர வேண்டும்

