ADDED : ஜூலை 02, 2026 11:35 PM

மானாமதுரை: மானாமதுரை அருகே நேதாஜி நகருக்கு செல்ல ரோடு இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் செய்களத்துார் ஊராட்சிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்ல முறையான ரோடு இல்லாத காரணத்தினால் சிவகங்கை ரோட்டில் இருந்து செய்களத்துார் செல்லும் ரோட்டில் இடது புறம் உள்ள பகுதியை பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
வீடுகளை கட்டுவதற்கு தேவைப்படும் கட்டுமான பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. சிறிய மழை பெய்தாலே இப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மக்களின் நலம் கருதி புதிதாக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
