ADDED : ஜூலை 02, 2026 11:36 PM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ரோட்டோரங்களில் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.
இவ்வொன்றியத்தில் சிங்கம்புணரியில் இருந்து வேங்கைப்பட்டி வழியாக பிரான்மலை செல்லும் ரோடு மற்றும் அரசினம்பட்டி வழியாக கல்லம்பட்டி செல்லும் ரோடுகளில் இருபுறமும் மண் கரைந்து பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.
இரவு நேரங்களில் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விடும்போது இந்த பள்ளங்களில் விழுந்து பலரும் காயமடைகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ரோடு அமைக்கப்பட்டபோது பக்கவாட்டில் முறையாக கிராவல் மண் அமைக்காததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர். இந்த பள்ளங்களை சீரமைக்க பலமுறை வலியுறுத்தியும் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக அனைத்து ரோடுகளின் பக்கவாட்டில் உள்ள பள்ளங்களை மண்ணால் மூடி சரி செய்ய வேண்டும்.
