/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலையோர கடைகளில் பல மடங்கு வசூல்
/
சாலையோர கடைகளில் பல மடங்கு வசூல்
ADDED : ஆக 28, 2025 04:52 AM
காரைக்குடி, : காரைக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளிடம் விதிமுறைகளை மீறி பல மடங்கு வாடகை வசூல் செய்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, செக்காலை, புதிய பேருந்து நிலையம், கல்லுாரிச் சாலை, ரயில்வே ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரிகள் நிரந்தரமாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
தவிர திருவிழா காலங்களில்,தேவர் சிலை,ராஜிவ் சிலை,கழனி வாசல் உட்பட நகரின் பல பகுதிகளிலும் கூடுதலாக கடைகள் அமைக்கப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை விற்பனை ,பொரி கடலை, பூமாலை, பழக்கடை உட்பட ஏராளமான சாலையோர கடைகள் போடப்பட்டிருந்தன. இந்த கடைகளில் வழக்கத்தை விட பல மடங்கு தரை வாடகை வசூல் செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வியாபாரிகள் கூறுகையில்: சாதாரண நாட்களில் தள்ளுவண்டிக்கு ரூ.25 வசூல் செய்ய வேண்டும். சாலையோர கடைகளுக்கு ரூ.20 முதல் ரூ.30 மட்டுமே வசூல் செய்ய வேண்டும். ஆனால் ரூ.100 முதல் 200 வரை வசூல் செய்கின்றனர். தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விழா காலங்களில் இரு மடங்கு பணம் கேட்பார்கள். ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு ரூ.500 வரை கேட்பது கலக்கத்தை ஏற்படுத்தியது. ரசீதும் தருவதில்லை. சிறு வியாபாரிகள் இறக்குக் கூலி, ஏற்று கூலிக்கே அதிகம் செலவு செய்கின்றனர். கடை அமைத்து எந்த பிரயோஜனமும் இல்லாமல் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கமிஷனர் சங்கரன் கூறுகையில்: 3 வருடம் குத்தகை. ஆண்டுதோறும் புதுப்பிப்பு செய்ய வேண்டும். புதிதாக பதவியேற்றதால் புதுப்பித்த விவரங்கள் தெரியவில்லை. கூடுதல் வசூல் செய்வது குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.