/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலையோர மரம் வளர்ப்பு: வனத்துறைக்கு மாற்றம்
/
சாலையோர மரம் வளர்ப்பு: வனத்துறைக்கு மாற்றம்
ADDED : ஜன 10, 2025 02:46 AM
திருப்புவனம்:தமிழகம் முழுவதும் சாலையோர மரம் வளர்க்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து வனத்துறைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் வளர்க்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வந்தது. புதிதாக தேசிய நெடுஞ்சாலை, நான்கு, ஆறு வழிச்சாலை என சாலைகள் உருவாகும் போது வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரங்கள் நடவு செய்து பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
நெடுஞ்சாலைத்துறையால் மரம் வளர்க்க முடியாத நிலையில் தற்போது வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மரம் வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை பரமக்குடியில் 2010ல் நான்கு வழிச்சாலை பணிக்காக ஆய்வு தொடங்கப்பட்டு 2014ல் பணிகள் தொடங்கின. வேம்பு, புளி, வாகை, மா உள்ளிட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
குறிப்பாக திருப்புவனம், சிலைமான், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகள் கையகப்படுத்தப்பட்டன. நான்கு வழிச்சாலை பணிக்காக இதில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்கு வழிச்சாலையை ஒட்டி பூவரசு,வாகை மரங்களை மட்டுமே நடவு செய்திருந்தது. ஆறு வருடங்கள் ஆகியும் மரங்கள் வளரவே இல்லை.
தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி உதவியுடன் தமிழக வனத்துறை நான்கு வழிச்சாலையில் லாடனேந்தலில் இருந்து பார்த்திபனுார், கரிசல்குளம் வரை இருபுறமும் மா, வேம்பு, புளி, வாகை, நீர் முருங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான ஐயாயிரம் மரங்களை நடவு செய்துள்ளது.
வனத்துறையினர் கூறியது:
நாட்டுபூவரசு, நீர்மருது, வேம்பு, புங்கம், புளியமரம், தாழி ( ருத்ராட்சை மரம்) உள்ளிட்ட ஆறு வகையான நிழல் தரும் மரங்கள் சுந்தரநடப்பில் உள்ள வனத்துறை நர்சரி மையத்தில் வாங்கி நான்கு வழிச்சாலையில் நடவு செய்துள்ளோம்,
கன்றுகளை ஆடு, மாடுகள் சேதப்படுத்தாமல் இருக்க பச்சை நிற வேலி அமைத்துள்ளோம்,ஆனால் அந்த வேலிகளை சிலர் திருடிச்சென்றுவிட்டனர். இதுவரை ஆயிரம் வேலிகளை திருடியுள்ளனர். ஆனாலும் நாங்கள் புதிதாக வேலிகள்அமைத்து செடிகளை வளர்த்து வருகிறோம்.
பொங்கல் முதல் தினசரி லாரி மூலம் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி ஒரு வருடம் பராமரித்து அதன்பின் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைப்போம், லாடனேந்தலில் இருந்து கீழப்பசலை வரை மானாமதுரை வனத்துறை சார்பிலும், மானாமதுரையில் இருந்து திருமயம் வரை சிவகங்கை வனத்துறை சார்பிலும் மரங்கள் வளர்க்க உள்ளோம்.
இதே போல தமிழகம் முழுவதும் சாலையோரம்மரம் வளர்க்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றனர்.