ADDED : ஆக 19, 2025 08:02 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் அய்யனார்குளத்தில் ஆசிரியரை வாளால் வெட்டி செயின், மோதிரம், பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை ட்ரோன் கேமரா ரோந்து மூலம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை அருகே அழகுமெய்ஞானபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் 43. கூட்டுறவுபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரி யராக பணிபுரிகிறார். ஆக.11 மதியம் 2:30 மணிக்கு முத்துாருக்கு டூவீலரில் அய்யனார் குளம் வழியாக சென்றார். வழி மறித்த 4 பேர் அவரை வாளால் வெட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின் மோதிரம் ரூ.5 ஆயிரத்தை வழிப்பறி செய்து தப்பினர்.
காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து மானாமதுரை அருகே உள்ள முருகபஞ்சானை சேர்ந்த முனீஸ்வரன் 27 கைது செய்த நிலையில் மேலும் 3 பேரை தேடினர். அவர்கள் கீழக்குளம் காட்டு பகுதியில் மறைந் திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் ட்ரோனை பறக்கவிட்டு தேடினர். அதில் வேலுார் மாரி மகன் தங்கமணி 19 காட்டுக்குள் மறைந்திருந்த இடத்தை போலீசார் உறுதி செய்து அவரை கைது செய்தனர்.