/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மலையில் உருண்ட பாறைகள்: அதிகாலையில் தவித்த மக்கள்
/
மலையில் உருண்ட பாறைகள்: அதிகாலையில் தவித்த மக்கள்
ADDED : டிச 15, 2024 12:35 AM

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி மலையில் அதிகாலையில் தீப்பொறி பறக்க பாறைகள் உருண்டு வந்த நிலையில் மக்கள் அச்சத்தில் தவித்தனர்.
சிவகங்கை மாவட்டம்பிரான்மலை தொடரில் ஒடுவன்பட்டி அருகே அசரீரி விழுந்தான்மலை உள்ளது. நேற்று அதிகாலை 2:15 மணிக்கு இம்மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு வரும் சத்தம் கேட்டது. துாங்கிக் கொண்டிருந்த மக்கள் வெளியே வந்து உச்சியில் இருந்து தீப்பொறி பறக்க பாறைகள் உருண்டு வருவதை பார்த்துள்ளனர்.
தொடர்ந்து 15 நிமிடம் பாறைகள் உருண்டு வரும் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த பாறைகளும் அடிவாரத்துக்கு வராமல் இடையிலேயே சிக்கி நின்றுள்ளது. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சிவாஜி கூறுகையில் '' அதிகாலையில் வெளியே வந்து பார்த்தபோது பாறைகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி பறப்பது தெரிந்தது. அனைவரும் உஷாராகவே இருந்தோம். ஆனால் 15 நிமிடத்துக்கு பிறகு சத்தம் நின்றதால், பாறைகள் எங்கோ சிக்கி நின்று விட்டதை அறிந்தோம். பகலில் சென்று பார்த்த சிலர் பெரிய பள்ளத்தில் பாறை சிக்கி கிடப்பதாக தெரிவித்தனர்'' என்றார்.இந்த சம்பவத்தால் அடிவாரப் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.
முன்னரே எச்சரித்த தினமலர்
இம்மலைத்தொடர்களில் மண், பாறை சரியும் அபாயம் இருப்பதாக டிச. 8 ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. பாறைகள் எந்த இடத்தில் தேங்கியுள்ளன அவற்றால் மீண்டும் ஆபத்து உள்ளதா என்பதை வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வருங்காலத்தில் மண், பாறை சரிவுகளை தடுக்க திட்டம் தயாரிக்கவும் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.