/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நல வாரியம் மூலம் ரூ.16.24 கோடி உதவி
/
நல வாரியம் மூலம் ரூ.16.24 கோடி உதவி
ADDED : ஏப் 10, 2025 06:08 AM
சிவகங்கை: சிவகங்கை தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34,882 தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு ரூ.16.24 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, சிவகங்கை கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., அரசு மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்க கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. பதிவு பெற்ற 60 வயதிற்குட்பட்ட கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் காக்கும் வகையில் இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ஆஸ்துமா, சிலிகோசிஸ், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பணி செய்ய முடியாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி ரூ.12,000 வீதம் இரு தவணையாக (ஆண்டுக்கு மட்டும்) வழங்கப்படும்.
பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க (ஆண்டுக்கு ஒரு முறை) ரூ.25,000, உலகளவில் பங்கேற்க ரூ.50,000 ஊக்க உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டங்களின் மூலம் கடந்த ஆண்டு (2024-2025) சிவகங்கை தொழிலாளர் நல உதவி கமிஷனர் மூலம் 28,268 தொழிலாளர்களுக்கு ரூ.8 கோடியே 91 லட்சத்து 42 ஆயிரத்து 568, நலத்திட்ட உதவி, மாத ஓய்வூதியம் மூலம் 6,614 பேருக்கு ரூ.7 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 24 வழங்கப்பட்டுள்ளன.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் இணையம் சார்ந்த ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் பதிவு செய்து பயன் பெறலாம். நலத்திட்ட உதவிகளை பெற www.tnuwwb.com' என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம், என்றார்.