/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எல்லோரும் எல்லாம் பெற்று நலமுடன் வாழ்வதே சனாதனம்
/
எல்லோரும் எல்லாம் பெற்று நலமுடன் வாழ்வதே சனாதனம்
ADDED : ஏப் 27, 2025 07:25 AM
தேவகோட்டை : உலகில் எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்பதே சனாதன தர்மம் என இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார்.
தேவகோட்டை சிவன்கோயிலில் பிரவசன கூட்டத்தில் பெரியபுராணம் சொற்பொழிவில் திருநாளை போவார் பற்றி சகடபுரம் வித்யா பீட சீனிவாசன் பேசியதாவது: உலகில் அனைவரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்பது சனாதன தர்மத்தின் பிரார்த்தனை ஆகும்.
பக்தி என்பது பொறுமையுடன் கடவுள் மீது தீராத அன்பு செலுத்துவது. கடவுளை எப்படி நேசிக்கிறோமோ அது போன்றே இறை அடியார்களையும் நேசித்து இறைவனாகவே பாவித்து சேவை செய்தனர்.
மக்கள் சேவை என்பது சனாதனத்தின் அங்கமாகும். மக்களுக்கு மட்டும் அல்ல விலங்குகள், பறவைகள் ஊர்வன என அனைத்து ஜீவராசிகளுக்கும் எறும்பு வரை உணவு தந்தவர்கள் அடியார்கள். வள்ளலாரும் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியதாக கூறுகிறார்.
சிதம்பரம் கொள்ளிடத்தின் அருகில் உள்ள கிராமம் ஆதனூர். அதன் ஒரு பகுதி புலைப்பாடி. அங்கே உள்ள உழவர்கள் இசையில் வல்லவர்கள். கொம்பு ஊதுவதிலும், பறை வாத்தியத்தை வாசிப்பதிலும் சிறந்து விளங்கினர். அங்கே குல மாணிக்கமாக தோன்றியவர் நந்தனார்.
சிவபெருமான் மீது மாறாத காதல் கொண்டவர். சிவனடியார்களுக்கு மிருதங்கம், கஞ்சிரா கருவிகளுக்கு தோல், யாழ் முதலான வாத்தியங்களுக்கு நரம்பு வழங்கியும், அபிஷேகத்திற்கு கோரோசனை கொடுப்பார்.
நந்தனார் ஒரு நாள் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள திருப்புன்கூர் கோயிலுக்கு சென்றார்.
அந்த கால மரபுப்படி கோயிலின் வெளியே நின்று வணங்கும் போது சுவாமி தரிசனத்திற்கு இடையூறாக நந்தி பெருமான் மறைத்து இருந்தார். இறைவனை காண முடியவில்லையே என நந்தனார் கண்ணீர் சிந்தினார்.
இறைவன் நந்தி விலக சொன்னதை தொடர்ந்து நந்தி தனது கழுத்தை சற்று சாய்த்துக் கொள்ளவே இறை தரிசனம் செய்தார்.
அங்கே இருந்த திருக்குளத்தை வெட்டி அகலப்படுத்தி உழவாரப்பணி செய்தார் நந்தனார். அங்கே ஒருவர் சிதம்பரத்தின் தல பெருமையை கூறவே அது முதல் சிதம்பரம் போக வேண்டும் என்ற ஆர்வம் நந்தனாருக்கு ஏற்பட்டது.
ஆனால் நாளை போவேன், நாளை போவேன் என்று தினமும் சொல்லி வந்ததால் திருநாளைப் போவார் என அழைக்கப்பட்டார். இறைவன் திருஉள்ளத்தின் படி சிதம்பரத்திற்கு நந்தனார் வந்து எரியும் நெருப்பில் மூழ்கி எழுந்து சன்னதி வந்து வழிபாடு செய்தார். நந்தனார் சிவஜோதியில் கலந்து ஐக்கியமானார்.
நந்தனார் போன்று பக்தியில் உறுதியுடன் இருந்தால் இறையருளை பெறலாம். அனைவரும் உறுதியுடன் பக்தி செய்ய வேண்டும் என்றார்.