/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சரணாலய சாலை மேம்பாடு வனத்துறை அனுமதித்தும் தாமதம்
/
சரணாலய சாலை மேம்பாடு வனத்துறை அனுமதித்தும் தாமதம்
ADDED : ஜூன் 07, 2025 12:20 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் - -மதுரை ரோட்டில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு வனத்துறை அனுமதி அளித்தும் ரோடு மேம்பாடு பணி துவக்கப்படாததால் சரணாலய மேம்பாடு பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை - கன்னியாகுமரி தொழிற்வட சாலை மேம்பாடுத் திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் மேலுார்- திருப்புத்துார் ரோடு இருவழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது.
அதில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயப் பகுதியில் 3.7 கி.மீ. துாரத்திற்கான சாலை பணிக்கு வனத்துறை அனுமதிக்காக பணிகள் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு வனத்துறை அனுமதி அளித்தது. மேலும் சரணாலய மேம்பாட்டிற்கான நிதியும் விடுவிக்கப்பட்டது.
தற்போது சரணாலயத்தில் பறவைகள் வெளியேறி விட்டதால், வனத்துறையினர் 3 கண்மாய்களில் துார்வாரி, வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை புனரமைத்த பின், ரோட்டை ஒட்டி பசுமை தடுப்பாக அடர்த்தியான
மரங்களை வளர்க்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனுமதி பெற்று ஓராண்டாகியும் ரோடு பணிகள் துவக்கப்படவில்லை. இதனால் மரங்கள் நடவு செய்ய முடியவில்லை.
அடுத்து ஆகஸ்ட் இறுதியில் மழை காலம் துவங்கி விட்டால் பறவைகள் வருகை துவங்கிவிடும். பின்னர் சாலை மேம்பாடு பணியை துவக்க முடியாது. மேலும் ஒரு ஆண்டிற்கு சாலைப் பணிகள் போடமுடியாத நிலை ஏற்படும். இதனால் சாலை மேம்பாடு பணிகளை விரைவுபடுத்த அப்பகுதியினர் கோரியுள்ளனர்.