/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துாய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
/
துாய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
ADDED : ஏப் 10, 2025 05:56 AM

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி துாய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை நகராட்சியில் நேற்று அதிகாலை துாய்மை பணியாளர்கள் தங்களின் பணியை புறக்கணித்து சம்பளத்தில் பிடித்தம் செய்த சொசைட்டி பணம், எல்.ஐ.சி., பிரீமியம் , ஜிபிஎப் தொகை, சிபிஎஸ் பங்குதொகை உள்ளிட்ட ஒரு கோடியே 39 லட்சத்தை அந்தந்த துறைக்கு செலுத்த வேண்டும். தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஜிபிஎப் கடன் தொகையை உடனே வழங்கிட வேண்டும். தொழிலாளர்களின் எஸ்ஆர் பணிப்பதிவேடுவை முறையாக பராமரித்து உரிய காலத்தில் ஆய்வு செய்ய வேண்டும். துப்புரவு மேற்பார்வையாளர் பதவிக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஜாதிய பாகுபாடுடன் துாய்மை பணியாளர்களை அலுவலகப்பணிக்கு அமர்த்தியதை ரத்து செய்து துாய்மை பணிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் வாரச்சந்தையை சுத்தம் செய்யும் பொறுப்பு ஒப்பந்ததாரர் பொறுப்பாகும். எனவே நிர்வாகம் கட்டாயப்படுத்தி தொழிலாளர்களை இரவுப் பணிக்கு பயன்படுத்துவதை வாபஸ் வாங்க வேண்டும்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் சீருடை, காலணி, சோப்பு, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் வீரையா தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கமிஷனர் கிருஷ்ணாராம், தாசில்தார் சிவராமன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். துாய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.