/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சங்கராபுரம் ஊராட்சி தலைவி மீண்டும் பதவியேற்பு
/
சங்கராபுரம் ஊராட்சி தலைவி மீண்டும் பதவியேற்பு
ADDED : டிச 21, 2024 08:24 AM

காரைக்குடி: சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி தலைவியாக தேவி நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் 2019 டிசம்பரில் நடந்தது. ஊராட்சி தலைவர் பதவிக்கு தேவி, பிரியதர்ஷினி போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கையில், தேவி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்து சான்றிதழ் வழங்கினார். பிரியதர்ஷினி எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
ஓட்டு எண்ணிக்கையில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் மீண்டும் சான்றிதழ் வழங்கினர். ஒரு பதவிக்கு இரண்டு வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கியது சர்ச்சையை கிளப்பியது.
இது சம்பந்தமான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதில் தேவி வெற்றி செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நடந்து வந்தது. உச்சநீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேட உத்தரவிட்டது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பிரியதர்ஷினி மனு தாக்கல் செய்தார். மாவட்ட முதன்மை நீதிமன்றம் பிரியதர்ஷினி வெற்றி செல்லும் என தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதிகள் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தவும்,தேவியின் மனுவை தள்ளுபடி செய்யவும் உத்தரவிட்டனர். கடந்த நவ.17 ஆம் தேதி பிரியதர்ஷினி பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில், இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில், தேவி வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு பி.டி.ஓ., ராஜேஷ்குமார் முன்னிலையில் சங்கராபுரம் ஊராட்சி தலைவியாக தேவி பதவி ஏற்றுக் கொண்டார். இதில் மாங்குடி எம்.எல்.ஏ., சாக்கோட்டை சேர்மன் சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.