திருப்புத்துாரில் தாலுகா அந்தஸ்திலான அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.அப்போதிருந்த மக்கள் தொகையை விட தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ள நிலையில்
அதற்கேற்ப அடிப்படை வசதி அதிகரிக்கப்பட்ட போதும், போதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.மருத்துவமனையை பராமரிக்க 20 ஆண்டுகளுக்கு முன்பு துப்புரவு பணியாளர்கள் 9 பேர், மருத்துவப்பணியாளர்கள் 6 பேர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றினர். தற்போது 5 பணியாளர்களே உள்ளனர். இவர்கள் 3 ஷிப்டுகளில் 75 படுக்கைகள் கொண்ட 7 வார்டுகள், மற்றும் மருத்துவமனை வளாகத்திலுள்ள 22 கழிப்பறை,மருத்துவமனை வளாகம் முழுவதையும் பராமரிக்க வேண்டும். நடைமுறையில் இது சாத்தியமில்லாதது. மேலும் இவர்களே
ஆண்,பெண் புறநோயாளிகளுக்கு பதிவும் செய்ய வேண்டியுள்ளது. இதனால் முழு துாய்மையான பராமரிப்பு பணி நடைபெறுவதில்லை என்று நோயாளிகள் கூறுகின்றனர்.
தற்போது 8 டாக்டர்களுக்கு 7 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். மகப்பேறு டாக்டர் பற்றாக்குறையாக உள்ளது.மாதம் 40க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடப்பதால் கூடுதலாக மகப்பேறு டாக்டர் தேவை.மேலும் அவசர சிகிச்சைக்கு எலும்பு முறிவு, அறுவை சிகிச்சைக்கு போதிய டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.
மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள், போஸ்ட் மார்ட்டத்தின் போது கூடும் உறவினர்கள் ஆகியோருக்குவளாகத்தில் தனி கழிப்பறை வசதி உருவாக்கவும் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.தற்போது அவசர சிகிச்சை பிரிவுக்கென தனி கட்டட வசதி உருவாகியுள்ளது. இப்பகுதியில் மழை பெய்தால் நீர் தேங்கி விடுகிறது. இதனால் வளாகத்தில் பெய்யும் மழை நீர் வெளியேற முழுமையான வடிகால் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துாரை சுற்றிலுமுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பொதுமக்கள் இங்கு
சிகிச்சைக்கு வரும் நிலையில் அனைத்து சிகிச்சைக்கும் தேவையான மருத்துவர்களையும், மருத்துவமனையின் சுகாதாரம் காக்க தேவையான பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். கூடுதல் கழிப்பறை வசதியும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.