ADDED : ஜூலை 27, 2025 12:15 AM
காரைக்குடி: காரைக்குடியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து திருடியவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
காரைக்குடி காவல் உட்கோட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு, அனைத்து மகளிர், அழகப்பாபுரம், குன்றக்குடி, பள்ளத்துார், செட்டிநாடு, சாக்கோட்டை, சோமநாதபுரம் மற்றும் குற்றப்பிரிவு என 10 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, காரைக்குடி கழனிவாசல் ஜெய்ஹிந்த் நகரில் வீட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு.
புதுவயலில் அரிசி கடையை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு. இலுப்பக்குடி தெற்கு குடியிருப்பில் நகை பணம் திருட்டு ஒரே நாளில் நடந்தது.
இந்நிலையில் மீண்டும் நேற்று, காரைக்குடி கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரது வீட்டின் கதவை உடைத்த நபர்கள் வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றதோடு, அரியக்குடி அன்பு நகரை சேர்ந்த உமா என்பவரது வீட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.