/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் ஓடும் கழிவுநீர், தெருவில் கொட்டப்படும் குப்பை
/
ரோட்டில் ஓடும் கழிவுநீர், தெருவில் கொட்டப்படும் குப்பை
ரோட்டில் ஓடும் கழிவுநீர், தெருவில் கொட்டப்படும் குப்பை
ரோட்டில் ஓடும் கழிவுநீர், தெருவில் கொட்டப்படும் குப்பை
ADDED : நவ 13, 2024 08:16 AM

சிவகங்கை : வாணியங்குடி ஊராட்சியில் ரோட்டில் ஓடும் கழிவுநீராலும் தெரு ஓரங்களில் கொட்டப்படும் குப்பையாலும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக ஊராட்சி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடி ஊராட்சி 9 வார்டில் மேல, கீழ வாணியங்குடி, சாமியார்பட்டி, அண்ணாமலைநகர், குறிஞ்சிநகர், ஆயுதப்படை குடியிருப்பு, வந்தவாசி, ஏனாபுரம், பையூர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 15 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். சிவகங்கை நகருக்கு அருகில் உள்ள பெரிய ஊராட்சி.இங்கு புதிதாக வீடு கட்டுபவர்களின் என்னிக்கை அதிகரித்து வருகிறது.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இந்த ஊராட்சியில் தான் உள்ளது. தெருவிளக்கு பராமரிப்பு, சுகாதாரம் காக்க போதிய நிதி, துப்புரவு ஊழியர்களின்றி ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. குடிநீர், தெருவிளக்கு பற்றாக்குறை, ரோடு, சுகாதார வளாகம் உட்பட அடிப்படை வசதிகளின்றி, ஊராட்சியை சேர்ந்த மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
அண்ணாநகர், ரோஸ் நகர், அழகு மெய்ஞானபுரம், ஆயுதப்படை குடியிருப்பு பின்பகுதி உள்ளிட்ட பகுதியில் வீடுகளுக்கு முறையான கால்வாய் வசதி கிடையாது. இந்த பகுதியில் உள்ள மக்கள் தங்களின் கழிவுநீரை வீட்டின் முன் பகுதியில் குழி தோண்டி விடுகின்றனர். பெரும்பாலான இடங்களில் இதில் இருந்து கழிவுநீர் நிரம்பி ரோட்டில் ஓடுகிறது.
அதேபோல் அண்ணாநகர் சமத்துவபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மாவட்ட இசைப்பள்ளி அருகே முல்லைப் பெரியாறு மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாயில் அந்த பகுதி மக்கள் குப்பையை கொட்டி வைக்கின்றனர். இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி அவதிக்குள்ளாகின்றனர்.
ரோஸ்நகர் மக்கள் கூறுகையில், சிவகங்கை மேம்பாலத்தில் இருந்து ரோஸ் நகர் பகுதிக்கு வரக்கூடிய ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆயுதப்படை குடியிருப்பு ரோடு, அண்ணாநகர் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பனங்காடி ரோட்டில் பெரும்பாலான தெருவிளக்குகள் எரிவதில்லை. ரோஸ்நகரில் பெரும்பாலான பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.
பனங்காடி ரோட்டில் இருந்தும் வந்தவாசி ரோட்டில் இருந்தும் தெருக்களில் செல்லக்கூடிய இணைப்பு ரோடுகள் மண் ரோடாகவே உள்ளது. நகரின் விரிவாக்க பகுதி என்பதால் இந்த பகுதியில் தெருக்களில் செல்லக்கூடிய ரோட்டை பேவர் பிளாக் ரோடாகவே அல்லது சிமென்ட், தார்சாலையாகவோ மாற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குப்பை வாங்க துாய்மை பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என்றனர்.