/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சஷ்டி விரதம்: வாழை பழங்களுக்கு தட்டுப்பாடு
/
சஷ்டி விரதம்: வாழை பழங்களுக்கு தட்டுப்பாடு
ADDED : நவ 06, 2024 08:07 AM
திருப்புவனம் : சஷ்டி விரதம் தொடங்கியதை அடுத்து வாழைப்பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானூர் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு வாழை விவசாயம் செய்யப்படுகிறது. திருப்புவனம் பகுதியில் பெரும்பாலும் நாட்டு வாழை மற்றும் ஒட்டு வாழையே பயிரிடப்படுகிறுது. வாழை பெரும்பாலும் முகூர்த்த நாட்களை கணக்கிட்டே பயிரிடப்படுகிறது. தீபாவளி உள்ளிட்ட முகூர்த்த நாட்கள் முடிவடைந்த நிலையில் வாழை விவசாயம் குறைந்து விட்டது.
இதனால் பழங்களின் வரத்தும் குறைந்து விட்டது. தேனி, பெரியகுளத்தில் இருந்து வாழைப்பழங்கள் திருப்புவனத்திற்கு வருகின்றன. விளைச்சல் குறைவால் வரத்தும் குறைந்து விட்டது. தற்போது முருகன் கோயில்களில் சஷ்டி விரதம் தொடங்கியுள்ளதால் இரவில் விரதம் இருக்கும் பக்தர்கள் பழங்கள் மட்டும் சாப்பிடுவது வழக்கம். வரத்து குறைவு தேவை அதிகரிப்பு என்பதால் வாழைப்பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு செவ்வாழைப்பழம் 15 ரூபாய், ரஸ்தாளி 10 ரூபாய் , பச்சை வாழை , நாட்டு வாழைப்பழம் எட்டு ரூபாய் என விற்கப்படுகிறது. விலை அதிகம் என்றாலும் போதிய அளவு பழங்கள் கிடைக்காததால் தட்டுப்பாடு நிலவுகிறது.
வியாபாரிகள் கூறியதாவது: சஷ்டி விரதம் உள்ளிட்ட விரத காலங்களில் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். ஐப்பசி, கார்த்திகை முகூர்த்த காலங்கள் வர உள்ளதால் விலையும் உயரும். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் விளைச்சலும் அதிகரித்து தட்டுப்பாடு குறையும் என்றனர்.