/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிடப்பில் போடப்பட்ட ரயில்பாதை திட்டங்கள்: இந்த முறையும் வெறும் தேர்தல் வாக்குறுதி தானா
/
கிடப்பில் போடப்பட்ட ரயில்பாதை திட்டங்கள்: இந்த முறையும் வெறும் தேர்தல் வாக்குறுதி தானா
கிடப்பில் போடப்பட்ட ரயில்பாதை திட்டங்கள்: இந்த முறையும் வெறும் தேர்தல் வாக்குறுதி தானா
கிடப்பில் போடப்பட்ட ரயில்பாதை திட்டங்கள்: இந்த முறையும் வெறும் தேர்தல் வாக்குறுதி தானா
ADDED : மார் 07, 2024 05:42 AM
சிவகங்கை மாவட்டத்தில் இரு ரயில்வே சந்திப்பு மானாமதுரை, காரைக்குடி. பிரிட்டிஷாரின் ராணுவ பயன்பாட்டிற்காக 1930 ல் உருவானது காரைக்குடி ரயில் நிலையம். அங்கிருந்து திருத்துறைப்பூண்டி செல்ல ரயில் துவக்கப்பட்டதால் சந்திப்பாக தரம் உயர்த்தப்பட்டது.
இதுவரை திருச்சி, திருத்துறைப்பூண்டி, மானாமதுரை ஆகிய 3 ரயில் வழித்தடங்களை மட்டுமே கொண்டுள்ளது. காரைக்குடியிலிருந்து திண்டுக்கல், துாத்துக்குடி,மதுரை செல்ல 3 புதிய பாதைகளுக்கான திட்டங்கள் சர்வே செய்து அரசுக்கு அனுப்பப்பட்டும் கிடப்பில் உள்ளது. வருவாய் இல்லை என்று காரணம் கூறப்பட்டு நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மாநில அரசு மக்களின் தேவைக்கான சேவையாக நஷ்டத்தில் பஸ்கள் இயக்க முன் வரும் போது, மத்திய அரசு மக்களின் தேவைக்காக கூடுதல் ரயில் பாதைகள் திட்டமிடுவதில் என்ன தவறு என்று பொதுமக்கள் கேட்டாலும் பதிலில்லை.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் பலர் அமைச்சர் அந்தஸ்தில் பல ஆண்டுகளாக இருந்தாலும் மக்களுக்கு இத்திட்டங்களை கொண்டு வரத் தவறி விட்டனர்.
கர்நாடகாவின் ஜாபர் ெஷரீப் ரயில்வே அமைச்சராக இருந்த போது அவரது சொந்த மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் புதிய ரயில்பாதை அமைத்தார். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் அவசியமான பாதையில் கூட புதிய ரயில்பாதை அமைக்க இங்கிருந்து சென்றவர்கள் முயற்சிக்க வில்லை.
காரைக்குடி-திண்டுக்கல்
தற்போது காரைக்குடி- மானாமதுரை- மதுரை- திண்டுக்கல் ரயில் வழித்தடம் உள்ளது. நீண்ட தொலைவு, கூடுதல் நேரம் என்பதால் பயணிகள் பயன்படுத்த வாய்ப்பில்லை. இதனால் காரைக்குடியில் துவங்கி திருப்புத்துார்- சிங்கம்புணரி- நத்தம் வழியாக திண்டுக்கல் செல்லும் புதியபாதைக்கான ஆய்வு பிரிட்டிஷ் ஆட்சியிலேயே நடந்து சர்வே கற்கள் ஊன்றப்பட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மீண்டும் 2015ல் 105 கி.மீ.நீளத்திற்கான புதிய பாதை அமைக்க சர்வே செய்யப்பட்டது, கடந்த 9 ஆண்டுகளாகியும் தற்போதும் கிடப்பில் உள்ளது. பிள்ளையார்பட்டி -பழநி செல்லும் பக்தர்களின் ஆன்மீக,புராதன சுற்றுலாவிற்கும் பயன்படும் இந்த வழித்தடம் அவசியமானதாகும். மேலும் நத்தம், சிங்கம்புணரி போன்ற விவசாய பகுதி என்பதால் விளைபொருட்கள் வர்த்தகத்திற்கும் உதவும்.
காரைக்குடி-மதுரை
காரைக்குடியில் துவங்கி பிள்ளையார்பட்டி- திருப்புத்துார் -திருக்கோஷ்டியூர் மேலுார்- மதுரை செல்ல புதிய வழித்தடம் 85.7 கிமீ. நீளத்திற்கு சர்வே செய்ப்பட்டு ரயில்வே அமைச்சகத்திற்கு கடந்த 2014ல் பொறியாளர்கள் சமர்ப்பித்து விட்டனர்.இந்த திட்டமும் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள், ஆன்மிக பயணிகள், கல்லுாரி, மருத்துவமனைக்கு செல்பவர்கள், பணியாளர்கள்.. என்று பலரும் இப்பகுதியிலிருந்து மதுரைக்கு செல்ல வாய்ப்புள்ள இந்த வழித்தடம் ஆய்வுடன் நின்று விட்டது. கிடப்பிலுள்ள திட்டத்தை துாசி தட்டி நிறைவேற்ற மக்கள் கோரியும் பலனில்லை.
காரைக்குடி---துாத்துக்குடி
காரைக்குடியில் துவங்கி தேவ கோட்டை-ராமநாதபுரம் வழியாக துாத்துக்குடி செல்லும் புதிய ரயில்பாதைக்கு கடந்த 2011 ல் சர்வே செய்யப்பட்டது.
215 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடத்தில் ரயில் பயணம் துவக்கினால்சிவகங்கை, ராமநாதபுரம்மாவட்ட ஏற்றுமதியாளருக்கு வெகுவாக உதவும். வர்த்த ரீதியில் உதவும் இந்த புதிய வழித்தடத்திற்கான திட்டமும் 13 ஆண்டுகளுக்கும் மேலாக கிடக்கிறது.
மதுரை-தஞ்சாவூர்
தற்போது மதுரையிலிருந்து திண்டுக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சுற்றுப்பாதையில் ரயில் பாதை உள்ளது. இதனால் நேரடி வழியான பஸ் போக்குவரத்திலேயே பலரும் பயணிக்கின்றனர். இருகோயில் நகரங்களையும் கந்தர்வகோட்டை வழியாக ரயில் வழித்தடத்தில் நேரிடையாக இணைப்பதன் மூலம் ஆன்மீக சுற்றுலா மேம்படும்.
மேலும் வர்த்தகர்களுக்கு வெகுவாக உதவும், மதுரை நகரின் வளர்ச்சிக்கும் உதவும். மதுரை -- சென்னைக்கு நேர் வழி பயணமாகவும் அமைவதுடன், பயண நேரமும் வெகுவாக குறையும். இந்த புதிய பாதைக்கு ஆய்வோ, சர்வே நடத்த கூட ரயில்வே துறை முன்வரவில்லை.
மேலும் கல்லல் ரயில்வே நிலைய அபிவிருத்தி, கல்லல் ஸ்டேஷன்- திருப்புத்துாருக்கு நேரடி சாலை வசதி, அனைத்து தாலுகாவிலும் நேரடி டிக்கட் புக்கிங் வசதி என்று ரயில்வே தொடர்பான பொதுமக்களின் எளிதான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை.
அடுத்த லோக்சபாவிலாவது இந்த திட்டங்கள்நிறைவேற்றப்படுமா என்று எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.தேர்தல் கூட்டங்களிலாவது இந்த திட்டங்களுக்கு கட்சியினர் உறுதி அளிப்பார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.

