ADDED : ஜன 13, 2025 06:46 AM

கீழடி : கீழடியில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்ட கலை திருவிழா நேற்று நடந்தது. கீழடியில் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் முதன்மையானது சிலம்பாட்டம், இதனை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழகம் முழுவதும் உள்ள சிலம்பாட்ட வீரர்களை ஒருங்கிணைத்து நேற்று சிலம்பாட்ட திருவிழா நடத்தினர்.
சிலம்பாட்டம் பயிலும் மாணவ, மாணவியர்கள் கீழடி அருங்காட்சியகத்தில் இருந்து 5ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் வரை சிலம்பாட்டம் ஆடியபடியே ஊர்வலமாக சென்றனர்.
அருங்காட்சியக வாசலில் பண்டைய கால தற்காப்பு கலை கருவிகளான சிலம்பம், வளரி, கேடயம், சுருள் கத்தியை காட்சிக்கு வைத்திருந்தனர்.
பேராசிரியர் முருகேசன், ஆசிரியர் கந்தவேல், பாக்கியராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.