/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிறைவு பெறாத சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி
/
நிறைவு பெறாத சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி
ADDED : டிச 12, 2024 05:15 AM
சிவகங்கை: சிவகங்கையில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கான கட்டுமானப்பணி முழுமையாக நிறைவு பெறாமல் பஸ்கள் உள்ளே நிற்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி ரூ.1.95 கோடியில் திட்டமிடப்பட்டு கடந்த மார்ச் 8 ல் பணி தொடங்கியது. பஸ் ஸ்டாண்டிற்குள் 18 கடைகள், நுழைவு வாயிலில் ஆர்ச், தரைதளம், கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் துவங்கியது. கடைகள், கழிப்பிட பணி மட்டும் முடிந்து கடைகள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
பணியை நிறைவு செய்வதற்கான ஒப்பந்த காலம் முடிந்தும் பணி முடிக்கப்படாததால் கான்ட்ராக்டர் தினமும் ரூ.10 ஆயிரம் அபராதமாக செலுத்த வேண்டும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்காக கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டது. மதுரை, மானாமதுரை, மேலுார், தொண்டி, கோவை செல்லும் பஸ்கள் ரோட்டில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. காலையில் பள்ளி, கல்லுாரி செல்ல வேண்டிய மாணவர்கள் பஸ்கள் நிற்கும் இடம் தெரியாமல் அவதிப்பட்டனர்.
தற்போது பஸ் ஸ்டாண்ட் உட்பகுதியில் மட்டும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்ச் அமைக்கும் பணி இன்னும் துவங்கவில்லை.ஒதுக்கப்பட்ட நிதிக்கான பணியே இன்னும் நிறைவு பெறாத நிலையில் மேலும் சிவகங்கை எம்.பி., நிதி ரூ.2 கோடி பஸ் ஸ்டாண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் திருப்புத்துார், மதுரை பஸ் நிற்கும் இடத்தில் இதேபோல் கான்கிரீட் தளமும், தகர கூரையும் அமைக்கப்பட உள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.74 லட்சத்தில் பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணி நடந்தது. அந்த நிதியில் பஸ் ஸ்டாண்டில் கூரை மட்டுமே அமைக்கப்பட்டது.
தற்போது வரை இந்த பஸ் ஸ்டாண்டிற்காக சுமார் ரூ. 5 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டும் பஸ் ஸ்டாண்ட் இன்னும் புதுப்பொலிவு பெறாமல் துாசி பறக்கும் இடமாகவே காணப்படுகிறது.
ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என எந்த அதிகாரியும் கண்காணிப்பதே இல்லை. பணி துவங்கி பல மாதங்களாகியும் கண்காணிக்க வேண்டிய நகராட்சி கமிஷனர் மட்டும் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
இந்த சூழலில் நகரின் அருகாமையில் வேறு இடத்தில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகராட்சி நிர்வாகம் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.ஒருவேளை அரசு புதிய பஸ் ஸ்டாண்ட் திட்டத்திற்கு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கினால் இந்த பழைய பஸ் ஸ்டாண்டிற்கு செலவழிக்கும் நிதி வீண் தானே என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் பணி முழுமை பெறாத நிலையில் பஸ்களை உள்ளே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் கட்டுமானப்பணியால் எழும் துாசியால் மக்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பஸ் ஸ்டாண்ட் ஒப்பந்ததாரர் தரப்பு கூறுகையில், பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணி 95 சதவீதம் முழுமை அடைந்துவிட்டது. 18 கடைகளும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. தரையில் கான்கிரீட் தளம் அமைத்துவிட்டோம். 10 எல்.இ.டி., விளக்குகளும், சி.சி.டி.வி.,கேமராக்கள் பொருத்தும் பணி மட்டும் தான் பாக்கி உள்ளது. இன்னும் 10 நாட்களில் பணியை முடித்து விடுவோம் என்றனர்.
நகராட்சி அதிகாரி கூறுகையில், பஸ்கள் அனைத்து ரோட்டில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. பணி 95 சதவீதம் முடிந்ததால் பஸ்களை உள்ளே நிறுத்திக்கொள்ள நகராட்சி தலைவர் அறிவுறுத்தினார். பணி முழுமையாக முடிந்த பிறகு பஸ் ஸ்டாண்ட் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றார்.