/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷனில் பொங்கல் தொகுப்புடன் வழங்க கரும்பை வாங்க மறுக்கும் அதிகாரிகள் சிவகங்கை விவசாயிகள் புகார்
/
ரேஷனில் பொங்கல் தொகுப்புடன் வழங்க கரும்பை வாங்க மறுக்கும் அதிகாரிகள் சிவகங்கை விவசாயிகள் புகார்
ரேஷனில் பொங்கல் தொகுப்புடன் வழங்க கரும்பை வாங்க மறுக்கும் அதிகாரிகள் சிவகங்கை விவசாயிகள் புகார்
ரேஷனில் பொங்கல் தொகுப்புடன் வழங்க கரும்பை வாங்க மறுக்கும் அதிகாரிகள் சிவகங்கை விவசாயிகள் புகார்
ADDED : ஜன 09, 2025 05:13 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து பொங்கல் கரும்புகளை வாங்காமல், கூட்டுறவு அதிகாரிகள் வியாபாரிகளிடம் செல்வதாக விவசாயிகள், கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
மாவட்டத்தில் 829 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் இருந்தே கூட்டுறவு அதிகாரிகள் ஒரு கரும்பு ஒன்றினை ஏற்று, இறக்கு கூலியுடன் ரூ.35க்கு வாங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 4.17 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் கரும்பு வாங்க கூட்டுறவு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். பொங்கல் கரும்பு நடவு செய்திருந்த சாலுார், காளையார்கோவில், கீழப்பூங்குடி, நாலுகோட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
விவசாயத்துறை நடத்திய ஆய்வில் மாவட்ட அளவில் 30.80 ஏக்கரில் 82 விவசாயிகளிடமிருந்து 4.38 லட்சம் கரும்பு வாங்கலாம் என தெரிவித்தனர். இம்மாவட்ட விவசாயிகள் கூட்டுறவு துறையினர் நம்மிடமிருந்து கரும்பு வாங்குவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் சாலுார் உட்பட பெரும்பாலான விவசாய நிலங்களில் விளைந்த கரும்புகளை வாங்காமல் புறக்கணித்து வருகின்றனர். மாறாக புரோக்கர்கள், வியாபாரிகளிடம் இருந்து கரும்புகளை வாங்குவதில் தான் ஆர்வம் செலுத்துகின்றனர். இது குறித்து நேற்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம், விவசாயிகள் புகார் அளித்தனர்.
கரும்பை வாங்க மறுக்கும் அதிகாரிகள்
மேலசாலுார் விவசாயி பூவேந்திரன் கூறியதாவது: மாவட்டத்தில் 4.38 லட்சம் கரும்பு விளைந்துள்ள நிலையில், 1 லட்சம் கரும்பை மட்டுமே எடுத்துள்ளனர். மற்ற கரும்புகளை வியாபாரிகள் மூலம் வாங்கவே கூட்டுறவு அதிகாரிகள் விரும்புகின்றனர். வெட்டப்பட்ட நிலையில் 1.5 லட்சம் கரும்பு வீணாக காட்டில் கிடக்கிறது. விவசாயிகள் நடவுக்காக செலவு செய்த தொகை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு கரும்புக்கு ரூ.25 கொடுத்தால் கூட போதும் என்று சொன்னாலும், வியாபாரிகளை திருப்திபடுத்தவே அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இதனால் அரசை நம்பி கரும்பு நடவு செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். கூட்டுறவுதுறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே அதிகாரிகள் எங்களது கரும்பை புறக்கணிக்கின்றனர், என்றார்.
5.5 அடிக்கு குறைந்த கரும்பு
கூட்டுறவு துணை பதிவாளர் (பொது வினியோகம்) பாபு கூறியதாவது, அரசு நிர்ணயித்த 6 அடி உயரமுள்ள கரும்புகளை 1.5 லட்சம் வரை வாங்கி விட்டோம். 5.5 அடிக்கும் குறைவாக விளைந்துள்ள கரும்புகளை வாங்குமாறு விவசாயிகள் தெரிவிப்பதால், எங்களால் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இருப்பினும் எந்தவிவசாயிகளும் பாதிக்காத வகையில் கரும்பை எடுக்க முயற்சித்து வருகிறோம், என்றார்.