/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளங்கள் நிறைந்த சிவகங்கை மேம்பாலம்
/
பள்ளங்கள் நிறைந்த சிவகங்கை மேம்பாலம்
ADDED : அக் 19, 2025 09:16 PM
சிவகங்கை: சிவகங்கை - தொண்டி ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறி ஆங்காங்கே கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. வாகன ஓட்டிகள் பாலத்தை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
சிவகங்கை - தொண்டி ரோடு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தினசரி 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக காளையார்கோவில், சருகனி, தேவகோட்டை, திருவாடனை, தொண்டி, காரங்காடு சுற்றுலா தலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த மேம்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.
இந்த மேம்பாலம் 2015ல் ரூ.25 கோடியில் கட்டப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்து 10 ஆண்டு கடந்த நிலையில் பாலத்தின் மேல்பகுதியில் பல இடங்கள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த கம்பிகளால் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகிறது. அதேபோல் குண்டும் குழியுமாக பாலம் இருப்பதால் இரவில் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். அவ்வப்போது பேட்ஜ் ஒர்க் செய்தாலும் மீண்டும் பெயர்ந்து வந்து விடுகிறது.நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்துள்ள மேம்பாலத்தை சரிசெய்து வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.