/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைதீர் கூட்ட மனு ரசீதில் அலுவலர்கள் குளறுபடி புலம்பி தவிக்கும் சிவகங்கை மக்கள்
/
குறைதீர் கூட்ட மனு ரசீதில் அலுவலர்கள் குளறுபடி புலம்பி தவிக்கும் சிவகங்கை மக்கள்
குறைதீர் கூட்ட மனு ரசீதில் அலுவலர்கள் குளறுபடி புலம்பி தவிக்கும் சிவகங்கை மக்கள்
குறைதீர் கூட்ட மனு ரசீதில் அலுவலர்கள் குளறுபடி புலம்பி தவிக்கும் சிவகங்கை மக்கள்
ADDED : பிப் 12, 2025 06:22 AM

சிவகங்கை : சிவகங்கையில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் குளறுபடி ஏற்படுத்தும் விதத்தில் ரசீதை வழங்குவதால் மனு அளித்தும் பிரயோஜனம் இல்லை என புலம்பி தவிக்கின்றனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் பொது குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் புதிய ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை, முதியோர் பென்ஷன், இலவச தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மக்கள் பிரச்னைகள் சார்ந்து அனைத்து விதமான மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளிக்கின்றனர்.
ஒவ்வொரு திங்கள் அன்றும் 800 முதல் 1000 மனுக்கள் வரை மக்கள் நம்பிக்கையுடன் அளித்து வருகின்றனர். பொதுவாக பொதுமக்கள் தரும் மனுக்களை பதிவு செய்யும் அலுவலர்கள், அந்த மனுவிற்கான ரசீதை வழங்குவர். அதில், எந்த அதிகாரிகள், துறையின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி அந்த மனுக்களை மேல்நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் பரிந்துரை செய்வார். ஆனால் கடந்த சில ஆண்டாக கலெக்டரிடம் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு எந்தவித தீர்வும் எட்டியதாக இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை அண்ணாமலை நகரை சேர்ந்த மணி மகன் வேல்முருகன் என்பவர், மானாமதுரை தாலுகா முத்தனேந்தல் வார சந்தைக்கு வரும் வியாபாரிகளிடம் கடைக்கு ரூ.20 முதல் 30 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மூடைக்கும், கடைக்கான தரை வாடகையும் வசூலிக்கின்றனர் '', என கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தார்.
அவருக்கு அலுவலர்கள் வழங்கிய ரசீதில், மானாமதுரை பி.டி.ஓ.,வின் நடவடிக்கைக்கு தான் அனுப்ப வேண்டும். ஆனால், மானாமதுரையில் உள்ள பிரச்னையை தீர்க்க, காளையார்கோவில் பி.டி.ஓ.,வின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து அலுவலர்கள் ரசீது அளித்து குளறுபடியை ஏற்படுத்தி வருகின்றனர். இது போன்று மக்களை நம்பிக்கை இழக்க செய்யும் விதமாக, குறைதீர் கூட்டத்தில் வழங்கும் மனுக்களுக்கு அதிகாரிகள், பொறுப்பற்ற பதிலையே தருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தக்க நடவடிக்கை எடுத்து, மக்கள் தரும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கையை எடுத்து, மனு வழங்குவோருக்கு நம்பிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என சிவகங்கை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.