/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
/
சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
ADDED : ஜன 25, 2024 05:18 AM

சிவகங்கை: சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்காத நகராட்சி நிர்வாகத்திற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கையில் கவுரிவிநாயகர் கோயில் எதிரே 5 ஏக்கரில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தெப்பக்குளத்தில் நிரப்பினர். இதன் மூலம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவ மழையால் தெப்பக்குளத்தில் நீர் அதிகளவில் சேகரமானது.
இருப்பினும், இத்தெப்பக்குளத்திற்கு வரும் வரத்து கால்வாயில் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. மழை காலங்களில் இக்கழிவு நீர் தெப்பக்குளத்தில் சேர்ந்து, தண்ணீர் பாசி படர்ந்து, துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், ராஜா சத்திரம் தெரு, வாரச்சந்தை ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள கால்வாய்களில் இருந்து கழிவுநீர் தெப்பக்குளத்திற்குள் விடப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. இதனால், தெப்பக்குளத்தில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கழிவு சேகரமாகி வருகின்றன.
எச்சரிக்கை
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் சென்றது. இந்த புகாரின்பேரில் நேற்று சிவகங்கை மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி செயற்பொறியாளர் திவ்யா, நகராட்சி கமிஷனர் செந்தில்குமார் தெப்பக்குளத்திற்குள் விடப்படும் கழிவு நீர் கால்வாய்களை ஆய்வு செய்தனர். உடனடியாக தெப்பக்குளத்திற்குள் கழிவு நீர் கலப்பதை தடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீடு, கடைகளுக்கு நோட்டீஸ்
இதையடுத்து, வீடு, வர்த்தக நிறுவனங்களில் வெளியேறும் சாக்கடை கழிவுகளை பாதாள சாக்கடையுடன் இணைக்காமல், தெப்பக்குளம் வரும் கால்வாயில் விட்டுள்ள வீடு, வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நகராட்சி கமிஷனர், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.