/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி பஸ்களை தேடி அல்லாடும் கிராமத்து மக்கள்
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி பஸ்களை தேடி அல்லாடும் கிராமத்து மக்கள்
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி பஸ்களை தேடி அல்லாடும் கிராமத்து மக்கள்
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி பஸ்களை தேடி அல்லாடும் கிராமத்து மக்கள்
ADDED : நவ 10, 2024 05:07 AM

சிவகங்கை : சிவகங்கையில் நடக்கும் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி நிறைவு பெறாமல் இழுவையாக இருப்பதால் பயணிகள் தினமும் அவதிப்படுகின்றனர். பணி விரைந்து முடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்காக ரூ.1.95 கோடியில் திட்டமிடப்பட்டு கடந்த மார்ச் 8 ல் கட்டுமான பணி தொடங்கியது. ஒப்பந்த காலம் முடிந்தும் பணி முடிக்கப்படவில்லை. தினமும் ரூ.10 ஆயிரத்தை அபராதமாக ஒப்பந்ததாரர் செலுத்த வேண்டும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்ட நிலையில் உள்ளது. மதுரை, மானாமதுரை, மேலுார், தொண்டி, கோவை செல்லும் பஸ்கள் ரோட்டில் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. காலையில் பள்ளி, கல்லுாரி செல்ல வேண்டிய மாணவர்கள் பஸ்கள் நிற்கும் இடம் தெரியாமல் அவதிப்படுகின்றனர்.
பகலில் ஒரு இடத்திலும், இரவில் ஒரு இடத்திலும் பஸ்கள் நிறுத்தப்படுகிறது. மக்கள் பஸ்களை தேடி அலைய வேண்டிய நிலை தொடர்கிறது.
இரவில் ஆம்னி பஸ்களும் ரோட்டை ஆக்கிரமித்து வரிசையாக நிற்பதால் புறநகர் பஸ்கள் நிற்க இடமே இல்லை. போக்குவரத்து போலீசார் இந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்கு வருவதே இல்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் ஸ்டாண்ட் உட்பகுதியில் மட்டும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பின்பு எந்த பணியும் நடக்கவில்லை. மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், காவல் துறை எந்த வித கவலையும் இல்லாமல் இப்பிரச்னையை கண்டு கொள்ளவே இல்லை, மக்கள் தான் கடந்த இரண்டு மாதமாக அவதிப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்து கிளை மேலாளர் கவியரசு கூறுகையில், பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணியை நகராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்க கோரி கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கலெக்டரும் நகராட்சியை அழைத்து பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம் தான் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
நகராட்சி மேலாளர் கென்னடி கூறுகையில், பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி ஒப்பந்ததாரருக்கு ஏற்கனவே பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காததற்கு தினமும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம். அவர் எப்போது பணியை முடித்து பஸ் ஸ்டாண்டை ஒப்படைக்கிறாரோ அதுவரை அபராதம் விதிக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் பணியை முடிக்க அறிவுறுத்தி வருகிறோம். நவ.30க்குள் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.