/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் மதுவிற்கு அடிமையாகும் சிறுவர்கள்
/
சிவகங்கையில் மதுவிற்கு அடிமையாகும் சிறுவர்கள்
ADDED : அக் 08, 2011 11:00 PM
சிவகங்கை : சிவகங்கையில், உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் சிறுவர்கள் மதுபானங்களுக்கு அடிமையாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில், அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் பிரசாரத்தின்போது வீடு, வீடாக தங்களின் சின்னங்கள், வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸ்களை வினியோகிக்கவும், கட்சியின் சின்னம் தாங்கிய சிறிய கட் அவுட்களை ஏந்தி செல்லவும் சிறுவர்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஐந்து சிறுவர்கள் கொண்ட கும்பலுக்கு, 500 ரூபாய் வரை தருகின்றனர். அவர்களில் சிலர் தீபாவளிக்கு பட்டாசு வாங்க, அந்த பணத்தை சேமித்து வைக்கின்றனர். சில சிறுவர்கள் மதுபானங்களுக்கு அடிமையாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிவகங்கை பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் சிறுவர்கள், மொத்தமாக பீர் பாட்டில்களை வாங்கிச்சென்று, காட்டுப்பகுதிகளுக்குள் வைத்து குடிக்கும் அவலநிலை உள்ளது. பெற்றோர்கள், பிரசாரத்திற்கு செல்லும் தங்களது பிள்ளைகளை கண்காணிக்காவிடில், அவர்கள் வருங்கால குடிகாரர்களாகும் அவலத்தை மாற்ற முடியாது.

