/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரவுடிகளின் புகலிடமாகும் சிவகங்கை
/
ரவுடிகளின் புகலிடமாகும் சிவகங்கை
ADDED : செப் 22, 2024 03:22 AM
சிவகங்கை: ரவுடிகளின் புகலிடமாக உள்ள சிவகங்கையை மீட்க அரசு சிறப்பு போலீஸ் அதிகாரிகளை இங்கு நியமித்து, போதை இளைஞர்களை மீட்டெடுக்க போதையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிக கொலை நடக்கும் இடமாக மாறி வருகிறது. குறிப்பாக இம்மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாக்கி ரவுடிகள் தங்களின் ஆதாயத்திற்காக அவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களை சென்னை, கோயம்புத்துார், திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு அழைத்து சென்று, தொழில் ரீதியான எதிரிகளுக்கு முடிவு கட்ட, இவர்களை பயன்படுத்துகின்றனர். இது தவிர, சிவகங்கை மாவட்டத்தில் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இளைஞர்கள் கொலை அதிகளவில் நடைபெற்று வருகிறது.
மதுரை வழியாக திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கைக்கு அதிகஅளவில் போதை பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இவற்றை முற்றிலும் ஒழிக்க முடியாமல் சிவகங்கை மாவட்ட போலீசார் திணறி வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் போதை இளைஞர்களால் அசம்பாவித சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
வடமாநிலங்களில் குற்றச்சம்பவத்தை நிறைவேற்றும், இளைஞர்கள் சிவகங்கையில் தஞ்சம் அடைகின்றனர். அதே போன்று இங்கு கொலை சம்பவங்களில் ஈடுபடுவோர் மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் தஞ்சம் அடைகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமித்து, தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிவகங்கை மக்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியும்.
பிடிபட்ட 214 கிலோ கஞ்சா
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்வின் சுதனை கொலை செய்தனர். அப்போதே அரசு சுதாரித்து ரவுடிகளை கூண்டோடு ஒழித்திருக்க வேண்டும்.
ஆனால், அரசு அதை கண்டும் காணாமல் விட்டதால், சிவகங்கையில் ரவுடிகள் வளர்ந்து போதை பொருட்களுக்கு அடிமையாகிவிட்டனர். இதனாலேயே அதிகஅளவில் குற்ற சம்பவங்கள் நடக்கிறது.
சமீபத்தில் 214 கிலோ கஞ்சா, 2215 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 123 கடைகளை சீல் வைத்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ரவுடிகளுக்கு சமுதாய ரீதியாக சில போலீசார் துணை போவது தான் ரவுடிகள் அதிகரிக்க காரணமாகும் என்றார்.