/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இட நெருக்கடி
/
திருக்கோஷ்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இட நெருக்கடி
திருக்கோஷ்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இட நெருக்கடி
திருக்கோஷ்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இட நெருக்கடி
ADDED : அக் 01, 2024 11:15 PM

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள், கர்ப்பிணிகள் வருகை அதிகரித்துள்ளதால் இட நெருக்கடியில் திணறுகிறது. கூடுதல் படுக்கைகளுடன் மகப்பேறு வார்டு துவக்கவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருக்கோஷ்டியூரில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திருக்கோஷ்டியூரை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகள் வருகைக்கு ஏற்ப மருத்துவர்,செவிலியர், அடிப்படை மருத்துவ வசதிகள் இங்கு இல்லை. தினசரி புற நோயாளிகளாக மட்டும் 200க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று மகப்பேறு பரிசோதனைக்கு கர்ப்பிணிகள் 30க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். பணியில் உள்ள ஒரு டாக்டரே இவர்களை பரிசோதிக்க வேண்டியுள்ளது. பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
கர்ப்பிணிகள் காத்திருக்க போதிய அறையும் இல்லை. நடை பாதை இருக்கைகளில் அமர வைக்கப்படுகிறார்கள்.
கர்ப்பப்பை பரிசோதனை, மார்பக புற்று நோய் பரிசோதனை செய்ய அறை வசதி கிடையாது. பாத்ரூம் அறையைத்தான் அதற்கு பயன்படுத்துகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன் ஸ்கேன் இயந்திரம் பழுதானது. அதற்கு பின் மாற்று ஸ்கேன்
வராததால் அந்த வசதியும் பறிபோய் விட்டது. சுகப்பிரசவத்திற்கு ஒரு படுக்கையும், அவசர சிகிச்சைக்கு ஒரு படுக்கையும் மட்டுமே உள்ளது. இருவருக்கு மேல் பிரசவம் என்றால் திண்டாட்டம் தான்.புற நோயாளிகளுக்கு வெளியே கழிப்பறை வசதி இல்லை.
பிராமணம்பட்டி சுப்பிரமணியன் கூறியதாவது: இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு இங்குதான் வருகின்றனர்.
ஆனால் போதிய டாக்டர்கள் இல்லை.இரவு நேரத்தில் சிகிச்சைக்கும் கூடுதல் டாக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருப்புத்துார் ேஷக்முகமது கூறியதாவது: திருப்புத்துாரிலிருந்தும் பலர் மகப்பேறு மருத்துவ பரிசோதனைக்கு இங்கு வருகின்றனர். போதிய டாக்டர்கள் இல்லாததால்
நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மகப்பேறு மருத்துவம் பார்க்க தனி டாக்டர் நியமிக்க வேண்டும் என்றார்.
இரு மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாற்றுப் பணியாக ஒரு மருத்துவர் மட்டுமே வருகிறார். நேரடியாக இரு டாக்டர்களை நியமிக்கவும், அதில் ஒருவர் மகப்பேறு மருத்துவராக நியமிக்கவும் நீண்ட நாட்களாக மக்கள் கோரிவருகின்றனர் ஆனால் நடவடிக்கை இல்லை. செவிலியர்கள் மூன்று பேருக்கு இருவரே உள்ளனர். ஒருவர் மாற்றுப்பணியில் வருகிறார். கூடுதல் நோயாளிகள் வருவதால் நான்கு செவிலியர்களை நேரடியாக நியமிக்க வேண்டும்.
படுக்கை வசதியில்லாதால் இருவருக்கு மேல் பிரசவம் பார்க்க வசதி இல்லை. இப்பகுதியினர் மகப்பேறு சிகிச்சைக்கு புதிய கட்டடம் கட்டி கூடுதல் படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்க கோரியுள்ளனர். அதற்கான இடவதியும் இங்கு உள்ளது.
இப்பகுதி போக்குவரத்து மையமாக திருக்கோஷ்டியூர் உள்ளதால் அதிகமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
கிராமங்களிலிருந்து மக்கள் வருவதால் கூடுதல் சுகாதார நிலையமாக தரம் உயர்த்தவும் கோரியுள்ளனர்.