/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடை கேட்டவருக்கு போட்டித்தேர்வு எழுத யோசனை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுவிற்கு அதிர்ச்சி பதில்
/
ரேஷன் கடை கேட்டவருக்கு போட்டித்தேர்வு எழுத யோசனை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுவிற்கு அதிர்ச்சி பதில்
ரேஷன் கடை கேட்டவருக்கு போட்டித்தேர்வு எழுத யோசனை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுவிற்கு அதிர்ச்சி பதில்
ரேஷன் கடை கேட்டவருக்கு போட்டித்தேர்வு எழுத யோசனை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுவிற்கு அதிர்ச்சி பதில்
ADDED : அக் 16, 2025 07:39 PM

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசனுாரில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் ரேஷன் கடை கேட்டு அளித்த மனுவிற்கு, வேலைவாய்ப்பு கோரி அனுப்பியதாக பதிலை மாவட்ட நிர்வாகம் வழங்கி 'இன்ப அதிர்ச்சியை' அளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், அரசனுாரில் ஜூலை 31ல் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நடந்தது. திருமாஞ்சோலையை சேர்ந்த மாரிமுத்து தங்கள் கிராமத்தில் 500 குடும்பம் வரை வசிப்பதாகவும், ரேஷன் பொருள் வாங்க 3 கி.மீ., துாரம் செம்பூர் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருமாஞ்சோலையில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரது மனுவிற்கு (எண்: 13229080) ஒப்புகை சீட்டும் வழங்கி விட்டனர்.
ஜூலை 31 அன்று முகாமில் கொடுத்த மனுவிற்கு, மாரிமுத்து வீட்டிற்கு அக்., 9ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பதில் கடிதம் வந்தது. அதில், தாங்கள் வேலை வாய்ப்பு கோரி 'உங்களுடன் ஸ்டாலின் முகாமில்' மனு அளித்துள்ளீர்கள். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு பதிவு மூப்பு, இனசுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு துறையில் அறிவிக்கப்படும் காலிபணியிடங்களை பொறுத்து, உங்களது பதிவு மூப்பு விபரம் பரிந்துரை செய்யப்படும். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற, வாரந்தோறும் 2 அல்லது 3வது வெள்ளியன்று நடக்கும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். வேலை வாய்ப்பு உதவி தொகை பெற விண்ணப்பித்தும் பயன் பெறலாம்,'' என அதில் தெரிவித்துள்ளனர். இதைப்பார்த்த மாரிமுத்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
வரவேற்பு பெறாத முகாம் அவர் கூறியதாவது: ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும், நடவடிக்கை இல்லாததால் தான், முகாமில் மனு செய்தேன். ரேஷன் கடை கேட்டு வழங்கிய மனுவிற்கு வேலைவாய்ப்பு கேட்டு மனு செய்ததாக பதில் தந்துள்ளனர். இத்திட்டம் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு பெறாததற்கு இதுவும் காரணம் என்றார்.
கம்ப்யூட்டரில் ஏற்றியதில் கவனக்குறைவு
வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முகாமில் வாங்கும் மனுவை எங்களுக்கு நேரடியாக அனுப்புவதில்லை. ஆன்லைனில் என்ன கோரிக்கை என்று தான் அனுப்புகின்றனர். அப்படி மாரிமுத்து பெயரில் எங்களுக்கு வந்தது, வேலைவாய்ப்பு கேட்டு என்று உள்ளது. அதற்கு பதில் அளித்திருப்போம். மனுவை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் போது கவனமின்றி பணிபுரிவதால் இது போன்று நடக்கிறது என்றார்.

